புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்ட 12 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு வந்த விமானம் இன்று மாலை டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையம் வந்தடைந்தது. அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற சட்டவிரோத குடியேறிகள் 299 பேர் பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்ட பின்பு அங்கிருந்து சொந்த நாடு வரும் இந்தியர்களின் முதல் தொகுதி இதுவாகும்.
தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப பனாமா, கோஸ்டா ரிகா போன்ற நாடுகளை பாலமாக அமெரிக்கா பயன்படுத்த தொடங்கி இருக்கிறது. இதன் ஒருபகுதியாக பல்வேறு ஆசிய நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை அமெரிக்கா பனாமாவுக்கு மாற்றியிருந்தது. இதனிடையே, பனாமாவில் இருந்து திரும்பிய இந்தியர்கள் துருக்கி ஏர்லைன்ஸ் மூலம் இஸ்தான்புல் வழியாக டெல்லி வந்திறங்கினர்.
இவர்களில் 4 பேர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தலா 3 பேர். ஒருவர் பற்றிய தகவல் அடையாளம் காணப்படவில்லை. பனாமாவில் இருக்கும் 299 பேரில் இந்தியர்கள் எத்தனை பேர் என்பது சரியாக தெரியவில்லை.
இதனிடையே வாராந்திர பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், “அமெரிக்காவில் இருந்து பனாமா, கோஸ்டா ரிகா போன்ற நாடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் இந்தியர்கள் குறித்த விவரத்தை சரிபார்த்து வருகிறோம். அது உறுதியானதும் அவர்களுக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். நாடு கடத்தப்படும் இந்தியர்கள் கண்ணியமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக உள்ளூர் அதிகாரிகள் உடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என அவர் கூறியுள்ளார்.
அதிபர் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றது முதல் அமெரிக்காவில் இருந்து இதுவரை அங்கிருந்து 332 இந்தியர்கள் தாயகத்துக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானத்தில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அழைத்து வரப்பட்டனர். பிப்ரவரி 5-ம் தேதி 104 பேர், 15-ம் தேதி 116 பேர், 16-ம் தேதி 112 பேர் என மூன்று விமானங்களில் அவர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அவர்களது கைகளில் கைவிலங்கு மற்றும் கால்களில் சங்கிலி பூட்டப்பட்டது மிகப் பெரிய சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.