புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று சந்தித்துப் பேசினார். அமைச்சர்கள் சாலைப் பணிகளை ஆய்வு செய்தனர்.
டெல்லியில் பாஜக சார்பில் ரேகா குப்தா 2 நாட்களுக்கு முன்னர் முதல்வர் பதவியேற்றார். இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் நேற்று ரேகா குப்தா சந்தித்து பேசினார்.
முதல்வர் பதவியேற்ற பிறகு அலுவல் ரீதியாக முதல் முறையாக பிரதமர் மோடியை ரேகா சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது டெல்லியில் மக்களுக்கு சேவை செய்ய தன்னை முதல்வராக் கியதற்கு பிரதமர் மோடிக்கு ரேகா குப்தா நன்றி தெரிவித்தார் என்று அவரது உதவியாளர் ஒருவர் கூறினார்.
பிரதமர் இல்லத்துக்குப் புறப்படுவதற்கு முன்னர் டெல்லி ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள தனது வீட்டில் குவிந்திருந்த ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் ரேகா கூறும்போது. “டெல்லி முதல் அமைச்சரவைக் கூட்டத்தில். பிரதமர் மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மக்களுக்கான சேவையில் ஒரு நாளை கூட வீணாக்கக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அதனால் தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற தொடங்கிவிட்டோம்” என்றார்.
இதற்கிடையில், டெல்லி கேபினட் அமைச்சர்கள் நேற்று சாலைப் பணிகளை ஆய்வு செய்தனர். டெல்லி நகரம் முழுவதும் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் நடைபெற்று வரும் பணிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ரேகா குப்தா ஆலோசனை நடத்தினார். அப்போது உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.
தேர்தலில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பாரபுல்லா பேஸ் 3 திட்டத்தை நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் பர்வேஷ் வர்மா கூறும் போது, “டெல்லி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளேன். அத்துடன் ஒப்பந்ததாரர்கள் அமைக்கும் சாலைகள் 10 ஆண்டுகள் நீடித்து உழைக்கும் என்ற உறுதி மொழியை அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளேன்” என்றார்.
சட்டம் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா. வடகிழக்கு டெல்லியில் உள்ள கஜூரி காஸ் பகுதியில் ஆய்வு செய்தார்.