புதுடெல்லி: முந்தைய ஆம் ஆத்மி அரசு, பொது கருவூலத்தை காலியாக விட்டுச்சென்றுள்ளது என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பெண்களுக்கான ரூ.2,500 மாதாந்திர உதவித்திட்டம் விரிவான திட்டமிடலுடன் அமல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
டெல்லியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 8-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை (திங்கள்கிழமை) நடைபெற உள்ளது. இந்தநிலையில், இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பிற பாஜக எம்எல்ஏக்களுடன் முதல்வர் ரேகா கலந்து கொண்டார். கூட்டத்துக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வரிடம் மகளிருக்கான உதவி திட்டத்தை செயல்படுத்துவது குறித்த திட்டமிடல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரேகா குப்தா, “டெல்லியில் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்கும் மகிளா சமிரித்தி திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
முந்தைய அரசு எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் நிலைமை என்னவென்றால், தற்போதைய அரசுக்கான நிதிநிலைமை குறித்து அதிகாரிகளுடன் அமர்ந்து விவாதித்தபோது பொதுக்கருவூலம் காலியாக இருப்பது எங்களுக்கு தெரியவந்தது. என்றாலும் பெண்களுக்கான அந்தத் திட்டம் விரிவான திட்டமிடலுடன் அமல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக டெல்லியின் முன்னாள் முதல்வர் அதிஷி , பிப்.20-ம் தேதி வெளியிட்ட வீடியோ செய்தியில், “பாஜக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே டெல்லி பெண்களுக்கு ரூ.2,500 கிடைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சி உறுதி அளித்திருந்தது. புதிய முதல்வரும், அவரது அமைச்சரவையும் இன்று (பிப்.20) பதவியேற்றுள்ளனர்.
இரவு 7 மணிக்கு அமைச்சரவையின் முதல் கூட்டம் நடந்துள்ளது. டெல்லியின் அனைத்து பெண்களும் தங்களுக்கான திட்டம் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். முதல் நாளிலேயே பாஜக அதன் வாக்குறுதியை மீறத் தொடங்கியுள்ளது. அவர்கள் சொன்ன திட்டத்தை நிறைவேற்றவில்லை. டெல்லி மக்களை ஏமாற்ற பாஜக முடிவு செய்துள்ளது.” என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலடியாக முதல்வர் ரேகா, “நாங்கள் பதவியேற்று ஒரு நாள் தான் ஆகிறது. அதற்குள் அவர்கள் எப்படி கேள்வியெழுப்ப முடியும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.