கோவை: விளைநிலங்களில் டிரோன் மூலம் மருந்து தெளிக்க, ‘உழவர் கைபேசி செயலி’ மூலமாக ‘டிரோன் மகளிரை’ விவசாயிகள் நேரடியாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிராமப்புறங்களில் பயிர் சாகுபடியில் பெரும்பாலான பணிகள் பெண்களால் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, பல்வேறு பண்ணை சார்ந்த புதிய தொழில்நுட்பங்களில் முழுமையாக ஈடுபட்டு, அதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வழக்கமாக நாம் பயன்படுத்தும் தெளிப்பான்களோடு ஒப்பீடு செய்தால், டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் போது, மருந்தின் பயன்பாட்டுத் திறன் அதிகரிக்கிறது. மேலும், தற்போது கிராமப் புறங்களில் வேலையாட்கள் கிடைப்பது குறைந்து வரும் நிலையில், டிரோன் மூலம், குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பில் மருந்து தெளிக்க முடியும். வழக்கமாக மருந்து தெளிப்பதற்குப் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு டிரோன் பயன்பாட்டில் குறைத்துக் கொள்ளலாம். மேலும், வேலையாட்களின் பணிச்சுமை குறைவதோடு, சாகுபடி செலவும் கணிசமாக குறைகிறது.
எனவே, இத்தகைய டிரோன் தொழில்நுட்பத்தை சுய உதவிக்குழு மகளிர்களுக்கு கற்று கொடுத்து, அதன் மூலம் அவர்களின் வருமானத்தை உயர்த்துவதற்காக, மத்திய அரசு கடந்த ஆண்டில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ‘டிரோன்’ வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தில், தமிழ்நாட்டில் 44 சுய உதவிக்குழு பெண்களுக்கு, டிரோன் குறித்த பயிற்சி அளித்து, இயக்குவதற்கான உரிமத்துடன், டிரோன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பான விபரங்கள் ‘உழவர் கைபேசி’ செயலியில் தனியார் இயந்திர உரிமையாளர்கள் எனும் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் மாவட்டம் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் தேவைக்கு உழவர் கைபேசி செயலி மூலமாக ‘டிரோன் மகளிரை’ நேரடியாக தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.