ட்ரம்ப், மோடி, மிலே, நான் பேசினால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என இடதுசாரிகள் கூறுவதாகவும் இதை மக்கள் நம்புவதில்லை என்றும் இத்தாலி பிரதமர் மெலோனி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற கன்சர்வேட்டிவ் (வலதுசாரி) அரசியல் நடவடிக்கை மாநாட்டில் (சிபிஏசி) இத்தாலி பிரதமர் ஜார்ஜியோ மெலோனி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் மற்றும் பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் உள்ளிட்டோர் கடந்த 1990-களில் உலகளாவிய இடதுசாரி-தாராளவாத வலையமைப்பை உருவாக்கினர். அப்போது அவர்கள் சிறந்த அரசியல்வாதிகளாக கொண்டாடப்பட்டனர்.
இப்போது ட்ரம்ப் (அமெரிக்க அதிபர்), நான், மிலே (அர்ஜென்டினா அதிபர்) அல்லது மோடி (இந்திய பிரதமர்) ஆகியோர் பேசினாலேயே ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என இடதுசாரிகள் கூறுகின்றனர். இது அவர்களுடைய இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
ஆனால் நாங்கள் இதைக் கேட்டு பழிகிவிட்டோம். இதில் நல்ல செய்தி என்னவென்றால், அவர்கள் எங்கள் மீது சேற்றை வீசினாலும் அவர்களுடைய பொய்களை மக்கள் நம்புவதில்லை. குடிமக்கள் எங்களுக்கு தொடர்ந்து வாக்களிக்கிறார்கள்.
வலதுசாரி தலைவர்கள் ஐரோப்பா கண்டம் முழுவதும் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்தி வருகிறார்கள். இது இடதுசாரிகளை அசவுகரியப்படுத்துகிறது.
ட்ரம்ப்பின் வெற்றி இடதுசாரிகளின் விரக்தியை அதிகரித்துள்ளது. அதனால்தான் அவர்கள் இவ்வாறு கூச்சலிடுகின்றனர். வலதுசாரிகள் தொடர்ந்து வெற்றி பெறுவதுடன் உலக அளவில் இணைந்து செயல்பட முயற்சி செய்து வருகின்றனர். இதை இடதுசாரிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.