ஹைதராபாத்: நாகர்னூர் ஸ்ரீசைலம் இடதுகரை சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில் அதன் இடிபாடுகளில் சிக்கிய 8 பேரை மீட்கும் நடவடிக்கையில் உதவ இந்திய ராணுவத்தின் பைசன் பிரிவு பொறியாளர் பணிக்குழு இணைந்துள்ளது.
இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுரங்கப்பாதை இடிபாடுகளை அகற்றவும் உள்ளே சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக வெளியேற்றவும், உயர் திறன்கொண்ட பம்பிங்க் செட்கள், தோண்டும் இயந்திரங்கள், புல்டோசர்களுடன் மீட்பு பணிகளில் ராணுவ பொறியாளர்களும், ராணுவ மருத்துவக்குழுக்களும் ஈடுபட்டுள்ளனர்.
மீட்பு பணிகளை விரைவுபடுத்துவதற்காக பிற மீட்பு குழுவினருடன் இணைந்து இந்திய ராணுவம் செயல்பட்டு வருகிறது. சுரங்கத்துக்குள் சிக்கியிருப்பவர்களை பாதுகாப்பாகவும் விரைவாகவும் மீட்பதே ராணுவத்தின் முன்னுரிமை பணியாக இருக்கும்.
அதற்காக, அரசு நிர்வாகம், தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, ராணுவம் மற்றும் சுரங்க கட்டுமான பணியை மேற்கொள்ளும் நிறுவனம் ஆகியவற்றுடன் கூட்டுக்கூட்டம் நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம் தோமலபெண்டாவில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (எஸ்எல்பிசி)யில் கட்டுமான வேலை நடந்து வந்த சுரங்கப் பாதையின் கூரை சனிக்கிழமை காலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். சுரங்கத்தின் 14-வது கிலோ மீட்டரில் சுமார் 3 மீட்டர் அளவுக்கு சுரங்கம் இடிந்துள்ளது.