நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை முடக்கக் கோரிய மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் சங்கச் செயலாளர் சங்கரநாராயணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் பல்வேறு நகரங்களில் அலுவலகம் தொடங்கி, பொதுமக்களிடம் முதலீடு வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக, மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிந்து, நியோமேக்ஸ் இயக்குநர்கள், முகவர்கள் என பலரைக் கைது செய்துள்ளனர்.
இந்த நிறுவனம் பொதுமக்கள் முதலீட்டைக் கொண்டு, மாநிலம் முழுவதும் நிலங்களை வாங்கியுள்ளது. திருச்சி, குற்றாலம், கயத்தாறு, கோவில்பட்டி, ராமேசுவரம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நியோமேக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளன. பல சொத்துகள் பினாமிகள் பெயரில் வாங்கப்பட்டுள்ளன. இந்த நிலங்களின் மொத்த மதிப்பு ரூ1,671 கோடிக்கு மேல் இருக்கும்.
இந்த சொத்துகளை விற்பனை செய்து, முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாரிடம் மனு அளித்தோம். போலீஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி தனபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், நியோ மேக்ஸ் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களைத் தொடங்கி, பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளது. இந்த நிறுவனங்களின் சொத்துகளை முடக்க போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் கூறப்பட்டது.
இதையடுத்து மனுதாரரின் மனுவை போலீஸார் ஒரு மாதத்தில் பரிசீலித்து, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.