ஆக்ரா: மகா கும்பமேளாவுக்கு இதுவரை 62 கோடி பக்தர்கள் வந்துள்ளனர் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் நடைபெறும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மாநாட்டுக்கு உங்களை வரவேற்கிறேன். இதையும் ஸ்டார்ட் அப் உலகின் யுனிகார்ன் மகா கும்பமேளா என அழைக்கலாம். ஆன்மீகமும், கலாச்சார பின்னணியும் கொண்ட இடத்துக்கு நான் வந்துள்ளது மிக முக்கியமானது. பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு இதுவரை 62 கோடி பக்தர்கள் வந்துள்ளனர்.
உலகில் எந்த நிகழ்வுக்கும், இந்த அளவுக்கு மக்கள் வந்திருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். இந்த நூற்றாண்டின் அரிய நிகழ்வுகளில் மகா கும்பமேளாவும் ஒன்று. இது மக்களை தங்களின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்துடன் மீண்டும் இணைவதற்கான தொடர்பை ஏற்படுத்தும். இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.