லாகூர்,
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 351 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் பென் டக்கெட் 165 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 352 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த ஆஸ்திரேலியா 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 356 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் இங்கிலிஸ் 120 ரன், அலெக்ஸ் கேரி 69 ரன் எடுத்தனர். இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அளித்த பேட்டியில் கூறியதாவது, இப்போட்டியின் ஆரம்பத்திலிருந்தே வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்று நினைக்கிறேன். மேத்யூ ஷார்ட் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினார். டிராவிஸும் நானும் மட்டுமே சோபிக்க தவறினோம்.
ஆனால், எங்கள் அணியின் மிடில் ஆர்டர் சிறப்பாக செயல்பட்டது. உண்மையிலேயே இது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற சூழலில் நங்கள் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதையே விரும்பினோம். ஏனெனில், இறுதியில் பேட்டிங் செய்வது எளிதாக இருந்தது. 350 ரன்களை துரத்த முடியும் என்று நினைத்தேன். ஒரு கணம் அவர்கள் 400 ரன்களுக்கு மேல் எடுப்பார்கள் என்று தோன்றியது.
ஆனால், அவர்களை 350 ரன்களில் கட்டுப்படுத்தியதில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். அதேசமயம் 50 ஓவர்கள் பேட் செய்தால் இந்த இலக்கை துரத்த முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். ஒருவருக்கொருவர் தங்களின் திறமைகளை நம்பி, மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். இரண்டு கீப்பர்களும் அழகாக பேட்டிங் செய்தனர்.
அவர்கள் இருவரும் சிறந்த பார்மில் உள்ளனர். ஜோஷ் பந்தை மைதானம் முழுவதும் அடிக்கிறார். எல்லா ஷாட்களையும் அடிக்கிறார். இங்கிலிஸின் அற்புதமான முயற்சி இது. அலெக்ஸ் கேரியும் சிறப்பாக விளையாடினார். அணியின் வெற்றியில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.