ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாஜக சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பஜன்லால் சர்மா முதல்வர் பதவி வகிக்கிறார்.
தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பேரவையில் கேள்வி நேரத்தின் போது சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் அவினாஷ் கெலாட் பேசினார்.
அப்போது, ‘கடந்த 2023 -24 பட்ஜெட்டில் கூட நீங்கள் (காங்கிரஸ்) வழக்கம் போல் உங்கள் பாட்டி இந்திரா காந்தியின் பெயரையே அனைத்து திட்டங்களுக்கும் சூட்டினீர்கள்’ என்று கூறினார்.
இதனால் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 3 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் அமளியில் ஈடுபட்ட 6 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதையடுத்து அவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, சஸ்பெண்டை ரத்து செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை இரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப் பேரவைக்கு உள்ளேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை விடிய விடிய இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் டிகாராம் ஜூலி கூறும் போது, “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை பற்றி கூறிய கருத்துகளை அமைச்சர் கெலாட் வாபஸ் பெற வேண்டும். அவர் கூறிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இரவு உணவு பஜ்ரா ரொட்டி, பூண்டு சட்னி: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்எல்ஏ.க்களுக்கு இரவு பஜ்ரா ரொட்டி, பூண்டு சட்னி உட்பட பல்வேறு உணவுகள் வழங்கப்பட்டன.
சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பசியுடன் போராட்டத்தில் இருந்தனர். அப்போது 2 பேர் பெரிய பெரிய டிபன் பாக்ஸ்களை தூக்கிக் கொண்டு சட்டப்பேரவை மாடிக்கு சென்றனர். அதில் கொண்டு வரப்பட்ட பஜ்ரா ரொட்டி, சப்ஜி, பூண்டு சட்னி, அல்வா உட்பட பல்வேறு உணவுகளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உண்டனர். இந்த உணவை எம்எல்ஏ அனில் சர்மா தனது வீட்டில் இருந்து கொண்டு வர ஏற்பாடு செய்திருந்தார்.