IND vs PAK: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் (ICC Champions Trophy 2025) பாகிஸ்தான் எதிரான போட்டியிலும் ரோஹித் சர்மா (Rohit Sharma) டாஸை தோற்றதன் மூலம், டாஸ் தோற்பதில் அவர் தனி சாதனையை பதிவு செய்துள்ளார்.
இன்றைய போட்டியில் டாஸை வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்தார். மேலும், ஆடுகளம் நேரம் போக போக மெதுவாகும் என்பதால் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார். ஆனால், நாங்கள் டாஸ் வென்றிருந்தால் பந்துவீச்சையே தேர்வு செய்திருப்போம் என ரோஹித் சர்மா கூறியிருந்தார். எனவே, ஏறத்தாழ டாஸ் தோற்றாலும் இந்திய அணிக்கு பாதகம் இல்லை எனலாம்.
IND vs PAK: ரோஹித் சர்மா தனி சாதனை
ஆனால், அது ரோஹித் சர்மாவுக்கு பாதகமாக முடிந்துள்ளது. ஆம், இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய கடைசி 12 போட்டிகளில் (இன்றைய போட்டி உள்பட) டாஸை தோற்றுள்ளது. ரோஹித் சர்மா ஓடிஐயில் கடைசியாக 2023ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக டாஸை வென்றிருந்தார். உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இருந்து இன்றைய போட்டி வரை தொடர்ந்து 12 முறை இந்தியா டாஸில் தோல்வியடைந்துள்ளது.
இதன்மூலம் ரோஹித் சர்மாவால் இந்திய அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. ஒருநாள் அரங்கில் தொடர்ந்து அதிக முறை டாஸை தோற்ற அணியாக நெதர்லாந்து அணியின் சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது. இதற்கு முன், நெதர்லாந்து அணி ஒருநாள் அரங்கில் 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை 11 டாஸ்களை தோற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Your #TeamIndia for today
Updateshttps://t.co/llR6bWyvZN#PAKvIND | #ChampionsTrophy pic.twitter.com/AzTW7e0PlP
— BCCI (@BCCI) February 23, 2025
IND vs PAK: முகமது ஷமி காயம்?, பாபர் அசாம் அவுட்!
தற்போது இந்திய அணி முதலில் பந்துவீசி வரும் நிலையில், முகமது ஷமி காலில் ஏற்பட்ட சிறு அசௌகரியம் காரணமாக 3 ஓவர்களை மட்டும் வீசிவிட்டு பெவிலியன் திரும்பி உள்ளார். அவர் மீண்டும் பந்துவீச வருவாரா இல்லையா என்பது பெரிய கேள்வியாக இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டியில் முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டிருப்பது சற்று பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இருப்பினும், ஒரு சில ஓவர்களுக்கு பின்னர் ஷமி களத்திற்குள் வந்தது நற்செய்தி எனலாம். அவர் களத்திற்குள் வந்த உடன், ஹர்திக் வீசிய 9வது ஓவரில் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 23(26) ரன்களில் ஆட்டமிழந்தார்.
IND vs PAK: இரு அணிகளின் பிளேயிங் லெவன்
இந்திய அணி அதன் பிளேயிங் லெவனில் இன்று மாற்றமே செய்யவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடனே களமிறங்கியிருப்பதன் மூலம் குல்தீப் யாதவ் மற்றும் ஹர்ஷித் ராணாவின், ரோஹித் சர்மா – கௌதம் கம்பீர் கூட்டணி வைத்திருக்கும் நம்பிக்கையை புரிந்துகொள்ள முடிகிறது. பாகிஸ்தான் அணியில் ஒரே ஒரு எதிர்பார்க்கப்பட்ட மாற்றம் மட்டுமே நடந்துள்ளது. காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய ஃபக்கர் சமானுக்கு பதில் இமாம் உல்-ஹக் இன்று விளையாடி வருகிறார்.