மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகில் உள்ள சதர்பூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் வீரேந்திர யாதவ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தார். இருவரும் தனிமையில் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.
அந்த நேரத்தில் வீரேந்திரா அப்பெண்ணிடம் அவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியதாகவும், பின்னர் அதனை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் கூறி அப்பெண் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வீரேந்திரா மீது போலீஸார் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்திருந்தனர். சம்பந்தப்பட்ட பெண் தனது புகாரில் வீரேந்திரா தனது கணவர் இல்லாத நேரத்தில் அடிக்கடி தங்களது வீட்டிற்கு வருவார். அந்த நேரத்தில் இருவரும் உறவு வைத்துக்கொள்வோம். வீரேந்திரா தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு என்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார் என்று போலீஸில் கொடுத்துள்ள புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

வீரேந்திரா தாக்கல் செய்த மனு நீதிபதி மணிந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் மனுதாரர் தரப்பில் ஆஜரான ஸ்ரேயாஸ் பண்டிட், “பெண் கொடுத்துள்ள பாலியல் வன்கொடுமை புகார் செல்லுபடியாகாது. அப்பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர். அப்பெண் விருப்பப்பட்டுத்தான் மனுதாரருடன் உறவு வைத்துக்கொண்டார். அப்பெண் கொடுத்துள்ள சம்மதத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு பெறப்பட்டதாகக் கருத முடியாது. இந்த உறவின் தன்மை குறித்து அப்பெண் நன்கு அறிவார்” என்று வாதிட்டார்.
இதையடுத்து இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, “புகார் கொடுத்திருக்கும் பெண்ணே மனுதாரருடன் (வீரேந்திரா) மூன்று மாதங்களாக உறவிலிருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். புகார்தாரர் வற்புறுத்தப்பட்டதாகவோ அல்லது கட்டாயப்படுத்தப்பட்டதாகவோ எந்தக் குற்றச்சாட்டும் கூறவில்லை. அதோடு பொய்யான வாக்குறுதியின் அடிப்படையில் உறவு வைத்துக்கொண்டதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை” என்று கூறி வீரேந்திரா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel