கேரளத்தில் தன் மனைவி கீதா (ப்ரியாமணி), இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார் காவல் அதிகாரி ஹரி ( குஞ்சாக்கோ போபன்). இவர் நிகழ்த்திய வன்முறை செயலால் பணியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டு மீண்டும் பணிக்குத் திரும்புகிறார். மூர்க்க குணமுடையவராக இவர் டீல் செய்யும் விதம் இவரின் மகளுடைய தற்கொலைக்கும் காரணமாகிறது. மீண்டும் பணிக்குத் திரும்பும் இவர் துளியும் கருணையற்ற காவல் அதிகாரியாக பல செயல்களைச் செய்கிறார்.

அப்படி ஹரி மேற்கொள்ளும் ஒரு செயின் வழக்கு மூலம் மறைமுகமாக பல செயல்களை நிகழ்த்தும் வில்லன் கேங்கை கண்டுப்பிடிக்கிறார். தன் மகளுக்கு அநீதி இழைத்ததும் இதே வில்லன் கும்பல்தான் என்பது அறிந்ததும் அவர்களைப் பிடிக்க விரைகிறார் இந்த காவல் அதிகாரி. இந்த வில்லன் கேங்கை ஹரி பிடித்தாரா? அவர்களை என்ன செய்தார்? என்பதே இந்த `ஆஃபிஸர் ஆன் டியூடி’ திரைப்படத்தின் கதை.
மூர்க்க குணமுடையவராக, மன அழுத்தத்தில் சிக்கித் தவிப்பராக, எமோஷன்களை பக்குவமாய் வெளிப்படுத்தி க்ளாப்ஸ் வாங்கிறார் சேட்டன் குஞ்சாக்கோ போபன். கதாபாத்திரத்துக்குத் தேவையான அனைத்தையும் சரியான மீட்டரில் கையிலெடுத்து ஹரி கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்யும் நடிப்பைக் கொடுத்து மாஸும் காட்டியிருக்கிறார்.

கணவரின் கோபம் உட்பட வாழ்க்கையின் சில போராட்டங்களில் சிக்கித் தவிக்கும் கீதாவாக நடிப்பின் ஆழத்தைத் தொட்டிருக்கிறார் ப்ரியாமணி. இவர்கள் இருவரின் நடிப்பே படத்தை இன்னும் பரபரப்பாக, தீவிரமாக மாற்றுகிறது. சிறிய நேரம் வந்தாலும் தனது அப்பாவியான முகப்பாவணைகளால் மனதில் பதிகிறார் ஜெகதீஷ். வழக்கமான ஸ்டீரியோடைப் வில்லனாக விஷாக் நாயர் & கேங் வந்து போகிறார்கள்.
கதாசிரியர் ஷாகி கபீரின் கதாபாத்திரங்கள் சிலவற்றை ஒரு ட்ராமாவில் சிக்கிக் கொண்டு மீள முடியாவதராக இருப்பார்கள். அந்த டெம்ப்ளேட் வரிசையில் இந்த ஹரி கதாபாத்திரமும் ஒரு ட்ராமாவில் சிக்கிக் கொண்டு மீள முடியாதவராக இருப்பார். காவல் அதிகாரியை முதன்மையாக வைத்துக் கதை செல்லும் களத்தில் அவர்களின் அனைத்து செயல்களையும் புனிதப்படுத்தாமல் அவர்களின் வன்முறை பக்கத்தையும் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜித்து அஷ்ரஃப்.

பல த்ரில்லர் கதைகள் களமாடிய கதையாக இருந்தாலும் அதில் சில புதுமையையும், சுவராஸ்யங்களையும் சேர்த்து பதைபதைப்போடு சீட்டின் நுணியில் அமர்ந்து பார்க்க வைக்கிறார் திரைக்கதையாசிரியர் ஷாகி கபீர். ஆனால், முக்கிய திருப்பங்கள் பார்வையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்ட பிறகும் வில்லன் கேங் சேஸிங் காட்சிகளை ஜவ்வா….க இழுத்து இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் கொஞ்சம் டல் அடிக்க வைக்கிறார் திரைக்கதையாசிரியர். அதே போல, பெண்களுக்கு எதிராக வன்முறையை நிகழ்த்தும் வில்லன் குழுவை காவல் அதிகாரியாக ஹரி அவர்களை தண்டிக்கிறாரா அல்லது பர்சனல் பழிவாங்கலாக செய்கிறாரா என்பதைத் தெளிவாக சொல்லாமல் குழம்ப வைக்கிறார். இதனை தாண்டி, திசைதிருப்பாத காட்சியமைப்புகள், அதிரடியான மாஸ் திருப்பங்கள் என திரைக்கதையில் பல அடுக்குகளைக் காட்டி ஆச்சரியப்படுத்துகிறார்.
கதாபாத்திரங்களின் உள்ளுணர்வுகளுக்கேற்ப ஒளிப்பதிவு இலக்கணங்களை பயன்படுத்தி காட்சிகளுக்கு உயிர்கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராபி வர்கீஸ் ராஜ். நான்-லினியர் திரைக்கதையம்சத்தையும், பரபர காட்சிகளையும் தனது கட்களால் செழுமைப்படுத்தி ஸ்டிரிக்ட்டாக கவனித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சாமன் சாக்கோ.

ஜேக்ஸ் பிஜாய்யின் பரபர பின்னணி இசை படம் செல்லும் களத்திற்கு நல்வழி அமைத்துக் கொடுக்கிறது. வில்லன் கேங்குக்கான அந்த அதிரடி மாஸ் பாடலும் வேற ரகம் மோனோ!
இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லரில் இந்த ஆஃபிஸர்ஸ் தங்களின் கடமைகளை ஆற்ற சில இடங்களில் தவறியிருந்தாலும் பல இடங்களில் நல்லபடியாக டீல் செய்து குட் ஸ்டார்களை பேட்ஜில் ஏந்திக் கொள்கிறார்கள்

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel