புதுடெல்லி: இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்கான அமெரிக்காவின் நிதியுதவி குறித்த சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், இதுதொடர்பாக அமெரிக்காவில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன என்றும், மத்திய அரசு அது குறித்து விசாரித்து வருகிறது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் (எஸ்ஆர்சிசி) நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கச் செய்வதற்கான அமெரிக்க நிதியுதவி குறித்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரதமரின் பொருளாதார ஆலேசானைக் குழு உறுப்பினரான சஞ்சீவ் சன்யால் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெய்சங்கர், “ட்ரம்ப் நிர்வாகத்தினரால் சில வெளியிடப்பட்டிருக்கும் இந்த தகவல்கள் கவலை அளிக்கக்கூடியவை. இந்தியாவில் சில (தேர்தல்) முடிவுகள் அல்லது கண்ணோட்டத்தை நிறுவும் உள்நோக்கத்துடன் அவை செயல்படுத்தப்பட்டதாக தெரிகிறது.
நமது அரசு அவை குறித்து ஆராய்ந்து வருகிறது. உண்மை வெளிவரும் என்று நான் நம்புகிறேன். அமெரிக்க நிதியுதவி குறித்து பார்த்தீர்களா, அதனை நீங்கள் கையாண்டீர்களா, இல்லையா என்பது இங்கே கேள்வி இல்லை. அமெரிக்க நிதியுதவி இங்கு அனுமதிக்கப்பட்டது. அமெரிக்கா நிதி வரலாற்று ரீதியாகவே இங்கே இருந்து வருகிறது. ஆனால் நல்ல நோக்கத்துக்காக, நல்ல நடவடிக்கைகளுக்காக அமெரிக்க நிதியுதவி இங்கே அனுமதிக்கப்பட்டது.
தற்போது அமெரிக்காவில் இருந்து தீய நோக்கங்களுடன் அதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. எனவே நிச்சயமாக அதுகுறித்து நாம் ஆராய வேண்டும். அதுபோல ஏதாவது நடந்திருந்தால், தீய நோக்கத்துடன் செயல்பட்ட நபர்கள் யார் என்பதை நாடு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக பிப்.20-ம் தேதி மியாமியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க சர்வதேச வளர்ச்சிக்கான அமைப்பு (USAID) இந்தியாவில் வாக்களர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அமெரிக்காவால் வழங்கப்பட்ட 21 மில்லியன் டாலர் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அது வேறு யாரையாவது தேர்ந்தெடுப்பதற்காக வழங்கப்பட்டதா என்றும் அவர் ஆச்சரியமாக கேட்டார்.
அதனைத் தொடர்ந்து பிப்.21-ம் தேதி இந்திய அரசு, “நாட்டில் சில நடவடிக்கைகளுக்கான அமெரிக்க நிதி குறித்த தகவல்கள் ஆழ்ந்த கவலை அளிக்கின்றன. இது உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாட்டு தலையீடு இருக்கிறது என்ற கவலைக்கு வழிவகுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தனது வாராந்திர செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் ரன்திர் ஜெய்ஸ்வால், “இந்த விவகாரம் குறித்து சம்மந்தப்பட்ட துறைகள், அமைப்புகள் விசாரித்து வருகின்றன” என்று தெரிவித்தார்.