Virat Kohli : `Return Of the Dragon' சதமடித்த கோலி; திணறிப்போன பாகிஸ்தான் – உற்சாகமடைந்த ரசிகர்கள்

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து இந்திய அணியை வெல்ல வைத்திருக்கிறார் கோலி. கடந்த சில மாதங்களாகவே சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடாத கோலி சரியாக முக்கியமான சமயத்தில் ‘Fire’ ஆன இன்னிங்ஸை ஆடியிருக்கிறார்.

விராட்

துபாய் மைதானத்தில் இரண்டாவதாக பேட்டிங் ஆடுவது சிரமமான விஷயமாகவே இருந்திருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 220 + டார்கெட்டை எட்டவே இந்திய அணி 46 ஓவர்கள் வரை எடுத்துக்கொண்டது. கோலியும் ரொம்பவே மெதுவாகத்தான் ஆடியிருந்தார். ஸ்ட்ரைக் ரேட் மிகக்குறைவாக இருந்தது. அந்த இன்னிங்ஸூக்காக கடும் விமர்சனங்களைச் சந்தித்திருந்தார். ஏற்கனவே பார்டர் கவாஸ்கர் தொடரில் நன்றாக ஆடவில்லை. சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் பெரிய இன்னிங்ஸ்களை ஆடவில்லை. அதனால் கோலி மீது பெரிய அழுத்தம் இருந்தது. அத்தோடுதான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கும் வந்தார். ரோஹித் சர்மா பவர்ப்ளேக்குள்ளாகவே அவுட் ஆகிவிட்டார். அந்த சமயத்தில்தான் கோலி கில்லுடன் கூட்டணி சேர்ந்தார்.

கடந்த போட்டியைப் போல அல்லாமல் இந்தப் போட்டியில் Run a Ball இல் ஆட வேண்டும் என்பதில் கோலி தெளிவாக இருந்தார். டாட்கள் ஆடினாலும் அதை ஈடுகட்டும் வகையில் வேகமாக ஓடி ரன்களைச் சேர்த்தார். ஏதுவான பந்துகளில் பவுண்டரிகளையும் அடித்துக்கொண்டே இருந்தார். குறிப்பாக, ஹரீஸ் ராப் வீசிய 13வது ஓவரில் ட்ரைவ் ஆடி இரண்டு பவுண்டரிகளை அடித்திருந்தார். அந்த இரண்டு ஷாட்களும் அத்தனை க்ளாஸ். அந்த ஷாட்களை பார்த்தவுடன் தான் கோலியின்மீது நம்பிக்கையே வந்தது. வேகப்பந்து வீச்சாளர்களை கோலி சிறப்பாக எதிர்கொள்ளவே ஸ்பின்னர்களை அறிமுகப்படுத்தினார் பாக். கேப்டன்.

ஸ்பின்னர்களுக்கு எதிராக கோலி சமீபமாக சிறப்பாக ஆடுவதில்லை. அதனால் லெக் ஸ்பின்னரான அப்ராரை கோலிக்கு எதிரான ஆயுதமாக ரிஸ்வான் பயன்படுத்தினார். ஆனால், இந்த முறை கோலி சிக்கவில்லை. கோலியை சிக்கவைக்கும் வகையில் ரிஸ்வான் திட்டமும் தீட்டவில்லை. கோலி ஸ்பின்னர்களுக்கு எதிராகத் திணறுவார் என தெரிந்தும் ஸ்லிப் இல்லாமல் வீச வைத்தார். இதையெல்லாம் ஒரு பெரிய இன்னிங்ஸை கட்டமைக்கவும் க்ரீஸில் கோலி நிலைத்து நிற்கவும் காரணமாகிவிட்டது. ஸ்ரேயாஸ் ஐயர் வந்த பிறகு அவர் ஒரு பக்கம் ஸ்பின்னர்களை சிறப்பாகக் கையாண்டு கோலியின் மீதான அழுத்தத்தைக் குறைத்தார். நஸீம் ஷாதான் பார்மில் இருக்கும் பௌலர் என்பதால் அவரை கோலியின் விக்கெட்டை எடுக்க அதிக ஓவர்கள் வீச வைத்தார் ரிஸ்வான். ஆனால், நஸீம் ஷாவின் ஓவரில் கவர்ஸ் பீல்டரின் தலைக்கு மேல் பவுண்டரி அடித்து அரைசதத்தைக் கடந்தார்.

கோலியின் பவுண்டரிக்கள் பிரமாதமாக இருந்தாலும் அதைக் கடந்து அவர் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய ஓடி ஓடி ரன் எடுத்த விதம்தான் இந்த சதத்துக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. அடித்த 100 ரன்களில் 72 ரன்களை ஓடி ஓடி தான் எடுத்திருந்தார். ‘கோலி பார்மில் இருக்கிறாரோ இல்லையோ நன்றாக ஆடுகிறாரோ இல்லையோ, ஆனால் க்ரீஸூக்கு இடையே ஓடி ஓடி ரன்கள் சேர்ப்பதில் மட்டும் அவர் சுணங்கியதே இல்லை.’ என ஹர்ஷா போக்லே வர்ணனையில் பாராட்டினார். அந்த Running Between the Wicket திறன் தான் கோலிக்கு இந்த சதத்தையே கொடுத்தது.

கடைசியில் கோலியின் சதத்துக்கும் அணியின் வெற்றிக்கும் தேவையான ரன்கள் நெருக்கமாக வந்தது. கோலியின் சதத்துக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட போது அணியின் வெற்றிக்கு 2 ரன்கள்தான் தேவைப்பட்டது. கோலி 85 ரன்களில் இருந்தபோதே இந்த விரட்டல் கணக்கு தொடங்கிவிட்டது. ரசிகர்கள் கோலியின் சதம் வருமா என பதைபதைப்பில் இருக்க பாகிஸ்தான் பௌலர்கள் ஒயிடெல்லாம் வீசி இன்னும் சோதித்தனர். ஆனால், கடைசியாக குஷ்தில் ஷா வின் பந்தில் வின்னிங் ஷாட்டாக பவுண்டரி அடித்து சரியாக சதத்தை நிறைவு செய்தார்.

‘முக்கியமான போட்டியில் இப்படி ஆடியதில் மகிழ்ச்சி. கடந்த போட்டியிலிருந்து சில கற்பிதங்களை எடுத்துக்கொண்டோம். என்னுடைய ரோல் க்ளியராக இருந்தது. மிடில் ஓவர்களில் நின்று ஆட வேண்டும். ஸ்பின்னர்களுக்கு எதிராக ரிஸ்க் எடுக்கக்கூடாது. வேகப்பந்து வீச்சாளர்களை அட்டாக் செய்ய வேண்டும் என்பதுதான் எனக்கான திட்டமாக இருந்தது.’ என ஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டு கோலி பேசியிருக்கிறார். கோலி என்ன திட்டத்தோடு வந்தாரோ அதைத் தெளிவாக செயல்படுத்தியிருக்கிறார்.

‘இந்த சதத்தைப் பார்த்த பிறகு கோலி இன்னும் 2-3 ஆண்டுகளுக்கு கட்டாயம் ஆடுவார். இன்னும் 10-15 சதங்களை அடிப்பார் என உறுதியாக சொல்கிறேன்.’ என நவ்ஜோத் சிங் கோலி பற்றி பேசியிருக்கிறார். அவரின் விருப்பம்தான் ரசிகர்களின் விருப்பமும். ரிட்டர்ன் ஆப் டிராகனாக கலக்கியிருக்கும் கோலி இன்னும் இன்னும் நெருப்பான இன்னிங்ஸ்களை ஆட வேண்டும்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.