ஈரோடு: ‘ஆடு, ஓநாய் ஒன்றுபட்டு இருக்க முடியாது என்ற அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் கருத்து குறித்து அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்’ என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை ஒட்டி, ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றார். அவரது தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி இனிப்பு வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது “அதிமுக பொதுச்செயலாளர், எதிர்கட்சித்தலைவரின் ஆணைப்படி, ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் கோபியில் நடைபெறுகிறது. பொதுவாக, ஜெயலலிதாவின் நினைவு நாளில், அனைவரும் சென்னை சென்று அஞ்சலி செலுத்துவோம். இந்த முறை ஜெயலலிதா பிறந்தநாளை, அந்தந்த பகுதிகளில் மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் கொண்டாடி வருகிறோம்” இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.
‘ஆடு, ஓநாய் ஒன்றுபட்டு இருக்க முடியாது என இபிஎஸ் கூறியது’ குறித்து’ செய்தியாளர்கள் கேட்டபோது, ‘ஆடு, ஓநாய் குறித்து அவர் சொல்லியிருக்கிறார். அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்’ என்று செங்கோட்டையன் பதில் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து அரசு போக்குவரத்துக்கழக பணிமனை பகுதியில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் செங்கோட்டையன் பேசுகையில், “அதிமுக அசைக்க முடியாத ஒரு சக்தி என்பதை நாடு அறியும், 2026 சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா நல்லாசியுடன் சிறந்த ஆட்சியை தமிழகத்தில் தரப்போகிறோம். போக்குவரத்து கழகத்தில் பல்வேறு கோரிக்கைகள் வைத்தாலும் கூட திமுக ஆட்சியில் எந்த விதமான கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. அனைத்து கோரிக்கைகளும் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும்” இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த சில நாட்களாக இபிஎஸ் பெயரை உச்சரிப்பதைத் தவிர்த்து வரும் செங்கோட்டையன், ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் அவர் பெயரை உச்சரிக்காதது குறிப்பிடத்தக்கது.