இந்தியாவில் 7 திட்டங்களுக்கு 750 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,500 கோடி மதிப்பிலான நிதியுதவியை அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டுக்கான நிறுவனம் (யுஎஸ்ஏஐடி) வழங்கி வருவதாக மத்திய நிதியமைச்சகம் அதன் ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
2023-24-ம் நிதியாண்டுக்கான அறிக்கையில் நிதியமைச்சகம் கூறியுள்ளதாவது: இந்தியாவில் தற்போது 750 மில்லியன் டாலர் மதிப்பிலான ஏழு தி்ட்டங்கள் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தின் நிதியுதவியின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2023-24-ம் நிதியாண்டில் மட்டும் இதற்காக 97 மில்லியன் டாலரை அதாவது ரூ.825 கோடியை யுஎஸ்ஏஐடி வழங்கியுள்ளது.
வாக்குப்பதிவை அதிகரிப்பதற்காக எந்த நிதியுதவியும் வழங்கப்படவில்லை. ஆனால், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, தண்ணீர், சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்; பேரிடர் மேலாண்மை மற்றும் உடல் ஆரோக்கிய திட்டங்களுக்கு அந்த நிதியாண்டில் அமெரிக்கா நிதியுதவி அளித்துள்ளது.
மேலும், நிலையான காடுகள் பராமரிப்பு மற்றும் காலநிலை தகவமைப்பு , ஆற்றல் திறன் தொழில்நுட்ப வணிகமயமாக்கல் மற்றும் கண்டுபிடிப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு கடந்த 1951 முதல் பரஸ்பர மேம்பாட்டுக்கான திட்டங்களுக்கு யுஎஸ்ஏஐடி நிதியுதவியை வழங்கி வருகிறது. பல்வேறு துறைகளில் இதுவரை 555 திட்டங்களுக்கு 17 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.