வாராணசி: உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 3.0 (கேடிஎஸ் 3.0), கடந்த 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாராணசியின் நமோகாட்டில் நடைபெறும் சங்கமத்தில், தமிழ்நாட்டின் பெருமையை விளக்கும் பல அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில், சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் (சிஐசிடி), இந்தியில் மொழிபெயர்க்கப் ஏராளமான தமிழ் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் சிஐசிடி அரங்கு இந்தி பேசும் வட மாநில மக்களை பெரிதும் கவர்கிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் சிஐசிடி இயக்குநர் முனைவர் இரா.சந்திரசேகரன் கூறுகையில், “சிஐசிடி அரங்குக்கு வருபவர்கள். தமிழின் முக்கியமான காப்பியங்கள், சங்க இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகள் குறித்து ஆவலாகக் கேட்கின்றனர். இதன் பலனாக தமிழ்க் கலாச்சாரம், தமிழக வரலாறு, தமிழ் மொழி மீதான மதிப்பு, உ.பி. வாசிகள் இடையே அதிகரித்து வருவது வியப்பை அளித்தது” என்றார்.
கேடிஎஸ் 3.0 தொடக்க விழாவில், சங்க இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட 34 இந்தி மொழிபெயர்ப்பு தொகுப்பு நூல்களை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஆதித்யநாத், சிஐசிடி அரங்குக்கு வருகை புரிந்தார். அவருடன் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகனும் வந்தனர். அப்போது, திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலின் குறள்களை இந்தியில் படித்து மகிழ்ந்து சிஐசிடிக்கு முதல்வர் ஆதித்யநாத் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்தியாவின் பாரம்பரிய இலக்கியங்கள் மூலம் நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கம். இதை செயல்படுத்த தமிழ் நூல்களை தெலுங்கு, கன்னடம், மலையாளம், சம்ஸ்கிருதம், இந்தி போன்ற பல்வேறு இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்ப்பதில் சிஐசிடி ஈடுபட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனமாக இருப்பதால், சிஐசிடி வெளியிடும் பதிப்புகள் வெளிநாடுகளில் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ நூல்களாகக் கருதப்படுகின்றன்.
இதன் மூலம் தமிழின் தொன்மை, சிறப்பு, வளம், பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை உலக மக்கள் அறிந்து கொள்ள செம்மொழி நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேடிஎஸ் 3.0 வின் நிறைவு விழா இன்று நடைபெறுகிறது.