சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. 242 ரன்கள் இலக்குடன் சேசிங் செய்ய களம் இறங்கிய இந்திய அணியில், விராட் கோலி சதமடித்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.

மறுபக்கம், பவுலிங்கில் ஹர்திக் பாண்டியா, 8 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து பாபர் அசாம் மற்றும் சவுத் ஷகீல் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதில், பாபர் அசாமை விக்கெட் எடுத்து சென்ட்ஆஃப் செய்யும் சைகையாக ஹர்திக் பாண்டியா கையசைத்தபோது, அவரின் கையில் கட்டியிருந்த ஆரஞ்சு நிற வாட்ச் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. உடனே, அந்த வாட்ச்சின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி ட்ரெண்ட் ஆனது. குறிப்பாக, அந்த வாட்ச்சின் மாடல், விலை ஆகிவயற்றைப் பற்றி ரசிகர்கள் இணையத்தில் தேடத் தொடங்கினர்.
அதில், ஹர்திக் பாண்டியா கட்டியிருந்த வாட்ச் ரிச்சர்ட் மில்லி ஆர்.எம் 27-02 (Richard Mille RM 27-02) மாடல் என்று தெரியவந்தது. லிமிடெட் எடிஷனாக உலக அளவில் 50 வாட்சுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த மாடல் வாட்ச் ஒன்றின் விலை மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7 கோடி.

டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடாலுக்காகத்தான் இந்த வாட்ச் மாடல் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. ரிச்சர்ட் மில்லி நிறுவனத்தின் வாட்சுகள் சுவிட்சர்லாந்திலுள்ள லெஸ் புருலெக்ஸ் நகரில் தயாரிக்கப்படுகின்றன. ரிச்சர்ட் மில்லி என்பவரால் அவரின் பெயரிலேயே 2001-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில், ஆண்டுக்கு 4,500 கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
