புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் வாராணாசியின் காசி தமிழ்ச் சங்கமம் 3.0-வில் (கேடிஎஸ் 3.0) இடம்பெற்றிருந்த செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன அரங்கை நாகாலந்து மாநில ஆளுநர் இல.கணேசன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
கேடிஎஸ் 3.0 நிகழ்வு வாரணாசியின் கங்கை கரைகளில் ஒன்றான நமோ படித்துறையில் நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி 14-ல் துவங்கிய இந்நிகழ்வில், தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அகியோர் தொடங்கி வைத்த கேடிஎஸ் 3.0 இன்றுடன் (பிப்.24) முடிவடைகிறது.
இங்குள்ள அரங்குகளில் சென்னையின் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அரங்கும் இடம்பெற்றிருந்தது. கேடிஎஸ் 3.0-வுக்கு நாகாலந்து ஆளுநர் இல.கணேசன் வருகை புரிந்தார். செம்மொழி தமிழாய்வு அரங்கில் இடம்பெற்ற இந்தி மொழிபெயர்பு தமிழ் நூல்களை ஆர்வமுடன் பார்வையிட்டார்.
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் பழைய நூற்பதிப்புகள், ஓலைச்சுவடிகளின் மின்னாக்கப் பதிப்புகள் காட்சிப்படுத்தியிருந்ததை பார்வையிட்டு மகிழ்ந்தார். நாகாலாந்து ஆளுநருக்கு ‘தமிழ்நாட்டில் சமண ஓவியங்கள்’ என்ற நூலைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் நினைவுப் பரிசாக அளித்தார்.
நிறுவனத்தின் பணிகளை ஆளுநர் இல.கணேசன் சிறப்பாகப் பாராட்டினார். அப்போது மத்தியக் கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலளாரும் உடனிருந்தார். இதேவகையில், கேடிஎஸ் 3.0-வுக்கு வந்த பல்வேறு பிரபலங்களும், உயர் அதிகாரிகளும் செம்மொழி தமிழாய்வு அரங்கை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
கோவை சங்கரா கண் அறக்கட்டளையின் தலைவர் ரமணி, வாராணாசி நகரக் காவல்துறையின் உதவி ஆணையரான தமிழர் டி.சரவணன் ஆகியோரும் அரங்கினைப் பிப்ரவரி 19-ல் பார்வையிட்டனர். செம்மொழி தமிழாய்வு அரங்கில் நிறுவன நூல்கள் பட்டியலில், திருக்குறள் மற்றும் பல சங்க இலக்கியங்களின் இந்தி மொழிபெயர்ப்புகள் இடம் பெற்றுள்ளன.
தஞ்சாவூர் மராத்திய அரச பரம்பரையைச் சேர்ந்த வாரிசான பாபாஜி ராஜா போன்ஸ்லேவும் பிப்ரவரி 20-ல் இந்த அரங்குக்கு வந்திருந்தார். ராஜா போன்ஸ்லேவுக்கு செம்மொழி தமிழாய்வு வெளியீடான, ‘திருப்புடை மருதூர் ஓவியங்கள்’ என்ற நூல் அளிக்கப்பட்டது.
உ.பி.யை சேர்ந்த பிரபலங்களுக்கு திருக்குறளின் இந்தி மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டன. இந்த பிரபலங்களுக்கு செம்மொழி தமிழாய்வு இயக்குநரான முனைவர். இரா.சந்திரசேகரன், நிறுவன வெளியீடுகள் பற்றி எடுத்துரைத்தார். அப்போது, பார்வைத்திறன் மாற்றுத் திறனாளிகளுக்காகப் பிரெய்லி முறையில் வெளியிட்ட 46 நூல்களின் பதிப்பின் சிறப்புகளையும் குறிப்பிட்டார்.