புதுடெல்லி: அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டை நினைவுகூரும் வகையில் ஓராண்டு சிறப்பு கொண்டாட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. நீதித் துறை உட்பட வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது. சில விவகாரங்களில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மாநில சட்டப்பேரவைகளுக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது கருத்துகளை மட்டுமே பதிவு செய்ய முடியும்.
அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தேசப்பற்று, தேசிய உணர்வு அதிகரிக்கும்.
இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு நிதி வழங்கிய விவகாரம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இது நமது ஜனநாயகத்துக்கு எதிரானது. குறிப்பிட்ட சிலருக்கு ஆதரவாக நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. இது ஆபத்தானது. இத்தகைய நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
மக்கள் நலன்கள் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதம் நடத்த நாடாளுமன்றம் சுமுகமாக செயல்பட வேண்டும். ஆனால் சிலர் நாடாளுமன்றத்தை திட்டமிட்டு முடக்கி வருகின்றனர். ஜனநாயகத்தின் கோயிலாக விளங்கும் நாடாளுமன்றத்தை அவமதிக்கின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் தங்கள் கடமையை உணர்ந்து பணியாற்ற வேண்டும்.
கடந்த 1975-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அவசர நிலையை அமல்படுத்தினார். அப்போது மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. அவசர நிலைக்கு எதிராக 9 உயர் நீதிமன்றங்கள் ஒருமித்து குரல் எழுப்பின. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜூன் 25-ம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதேபோல அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்த கடந்த 10 ஆண்டுகளாக அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வாறு ஜெகதீப் தன்கர் பேசினார்.