சென்னை அடுத்த மேற்கு தாம்பரம், பூர்ணதிலகம் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் (39). இவர் கனடாவில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் சேலையூரில் குடியிருந்தபோது சுரேஷ், அவரின் மனைவி ஆர்த்தி ஆகியோர் அறிமுகமாகியிருக்கிறார்கள். அப்போது சுரேஷின் குடும்பத்தினர் தங்களுக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளைத் தெரியும் என கூறியிருக்கிறார்.
இந்தச் சூழலில் திருமங்கலத்தில் உள்ள வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்க முடிவு செய்திருக்கிறார் சுந்தரம். இந்தத் தகவலை சுரேஷிடம் சுந்தரம் கூறியதும் உங்களுக்கு சலுகை விலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டில் வீடு வாங்கித் தருவதாகக் கூறியிருக்கிறார். அதற்கு 3 லட்சம் ரூபாய் அட்வான்ஸாக கொடுக்க வேண்டும் என சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ரூ.3 லட்சத்தை சுரேஷிடம் சுந்தரம் கொடுத்திருக்கிறார். உடனே பணம் செலுத்தியதற்கான ரசீதை சுந்தரத்திடம் சுரேஷ் கொடுத்திருக்கிறார். அதன்பிறகு வீடு தொடர்பாக மேலும் 15 லட்சம் ரூபாயை சுரேஷ் வாங்கியிருக்கிறார். 18 லட்சம் ரூபாய் கொடுத்த பிறகும் வீடு வாங்கி கொடுக்காமல் சுந்தரத்தை சுரேஷ் ஏமாற்றி வந்திருக்கிறார். இதையடுத்து சுந்தரம் கொடுத்த நெருக்கடியை அடுத்து வீடு ஒதுக்கப்பட்டதற்கான அடையாள அட்டை ஒன்றையுயம் சுந்தரத்திடம் சுரேஷ் கொடுத்திருக்கிறார்.
வீடு கிடைத்த மகிழ்ச்சியில் சுந்தரம், திருமங்கலம் சிக்னல் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அலுவலகத்துக்குச் சென்று அடையாள அட்டை, ரசீதை காண்பித்து வீடு குறித்து விசாரித்திருக்கிறார். அப்போது அங்குள்ள அதிகாரிகள், இந்த ரசீது, அடையாள அட்டை போலி எனத் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து சுரேஷிடம் சுந்தரம் விசாரித்தபோது அவர் சமாளித்திருக்கிறார்.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுந்தரம், திருமங்கலம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி சுரேஷை கைது செய்தனர். இந்த மோசடியில் சுரேஷின் மனைவி ஆர்த்தி, அவரின் குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீஸார்தேடி வருகிறார்கள்.