ஜெர்மன் பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கூட்டணியின் தலைவரான ஃப்ரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றுள்ளார். ஆளும் சோஷியல் ஜனநாயகக் கட்சியின் ஓலஃப் ஸ்கோல்ஸ் படுதோல்வியைத் தழுவியுள்ளார். ஃப்ரெட்ரிக் மெர்ஸ் வெற்றிக்கு ட்ரம்ப் பாணியில் சட்டவிரோத குடியேறிகள் மீது கடும் நடவடிக்கை என்று அவர் கொடுத்த வாக்குறுதி பெறும் பங்குவகித்ததாக தெரிகிறது.
ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சியில் அவரது கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் மற்றும் கிறிஸ்துவ சோஷியல் யூனியன் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்சிகள் இணைந்து பெரும்பான்மை வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளன. வெற்றிக்குப் பின்னர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய மெர்ஸ், “ஜெர்மனியில் இனி மீண்டும் நம்பகத்தன்மை வாய்ந்த ஆட்சி நடைபெறும்” என்றார்.
யார் இந்த மெர்ஸ்? 1955-ம் ஆண்டு ஜெர்மனியின் பிரிலோன் நகரில் பிறந்தவர் மெர்ஸ். இவர் குடும்பம் சட்ட நிபுணர்கள் பின்னணி கொண்டது. 1972-லேயே சிடியு கட்சியில் தன்னை இணைந்துக் கொண்டார். 1976-ல் இவரும் சட்டம் பயின்றார். 1981-ல் சார்லெட் மெர்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவரும் சட்ட வல்லுநரே. தற்போது சார்லெட் மெர்ஸ் நீதிபதியாக இருக்கிறார். இத்தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
1989-ம் ஆண்டு ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994-ல் ஜெர்மனி நாடாளுமன்றத்துக்கு தேர்வானார்.
அவர் சார்ந்த கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த மெர்ஸ் 2000-ம் ஆண்ட்டில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவரானார். 2002-ல் அப்பதவியை ஏஞ்சலா மெர்கலிடன் வழங்கினார். 2005-ல் அவருக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவு ஏற்பட்டது. 2009-ல் அரசியலில் தான் ஓரங்கட்டப்படுவதாக உணர்ந்த மெர்ஸ் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். சட்டம், நிதி மேலாண்மைத் துறையில் தனக்கென தனியிடத்தை நிறுவினார். 10 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தார். ஏஞ்சலா மெர்கல் பதவியை ராஜினாமா செய்தபின்னர் மெர்ஸ் தீவிர அரசியலில் ஈடுபட்டத் தொடங்கினார். ஆனாலும் உடனடியாக அரசியலில் மீள் கட்டமைப்பு அவருக்கு சாத்தியப்படவில்லை. 2021 ஆம் ஆண்டு ஜெர்மன் நாடாளுமன்றத்துக்குள் மீண்டும் பிரவேசித்தார் மெர்ஸ். 2022-ல் கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். அதன்பின்னர் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் கட்சியின் தேசியத் தலைவரானார்.
இந்நிலையில் நடந்துமுடிந்த தேர்தலில் மெர்ஸ் வெற்றி பெற்றுள்ளார். சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவது தொடர்பாக அவரது வலுவான நிலைப்பாடு மற்றும் ஜெர்மனியின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது போன்ற அவரது வாக்குறுதிகள் அவருக்கு வெற்றியை பெற்றுத் தருவதில் முக்கியப் பங்குவகித்துள்ளன. மெர்ஸின் பெரிய சவால், கூட்டணி ஆட்சியை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக ஆட்சியை அமைப்பது என்பதாகவே உள்ளது.
ட்ரம்ப் வாழ்த்து: மெர்ஸ் வெற்றியை வரவேற்றுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கமான ட்ரூத் சோஷியலில், “அமெரிக்காவைப் போலவே ஜெர்மனி மக்களும் முட்டாள்தனமான கொள்கைகளைப் புறம்தள்ளியுள்ளனர். எரிசக்தி மற்றும் குடியேற்ற விவகாரத்தில் ஜெர்மனி மக்கள் சரியான முடிவை எடுத்து தேர்தலில் வாக்களித்துள்ளனர். ஜெர்மனிக்கு இது மிகப்பெரிய நாள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.