கேரள ஜனபக்ஷம் கட்சியின் தலைவராக இருந்தவர் பூஞ்ஞாறு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ். இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி விவாதத்தை கிளப்புவார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருவனந்தபுரத்தில் நடந்த அனந்தபுரி இந்து மகா சம்மேளனத்தில் பேசிய பி.சி.ஜார்ஜ், முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கைது நடவடிக்கைக்கு ஆளானார். இதற்கிடையே பி.சி.ஜார்ஜ் தனது மகனுடன் பா.ஜ.க-வில் இணைந்தார்.

கடந்த மாதம் 5-ம் தேதி ஒரு தொலைகாட்சி விவாதத்தில் பங்கேற்ற பி.சி.ஜார்ஜ் முஸ்லிம்களுக்கு எதிராக சில சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியிருக்கிறார். இதுகுறித்து முஸ்லிம் லீக் அமைப்பின் இளைஞர் அமைப்பான யூத் லீக் ஈராற்றுப்பேட்டை தொகுதி கமிட்டி சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
யூத் லீக் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து கோட்டயம் செசன்ஸ் கோர்டில் முன் ஜாமின் கேட்டு மனு செய்தார். கோட்டயம் கோர்ட் முன் ஜாமின் மறுத்ததை அடுத்து கேரளா ஐகோர்ட்டில் முன் ஜாமின் கேட்டு மனு அளித்தார். அந்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. போலீஸில் சரணடைய இரண்டு நாள்கள் கால அவகாசம் கேட்டிருந்தார் பி.சி.ஜார்ஜ். இன்று காவல் நிலையத்தில் சரணடைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பா.ஜ.க நிர்வாகிகள் புடைசூழ ஈராற்றுப்பேட்டை கோர்ட்டில் சரணடைந்தார்.

கோர்ட்டில் சரணடைந்த பி.சி.ஜார்ஜை விசாரணை நடத்த தங்கள் கஸ்டடியில் விடவேண்டும் என போலீஸார் வேண்டுகோள் விடுத்தனர். மேலும், அவர் மீது உள்ள பழைய வழக்குகள் குறித்த ஆதாரங்களையும் போலீஸார் கோர்ட்டில் சமர்ப்பித்தனர். இன்று மாலை 6 மணி வரை போலீஸார் விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது. போலீஸார் விசாரணை முடிந்ததும் பி.சி.ஜார்ஜை 14 நாள்கள் ரிமாண்ட் செய்ய கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பி.சி.ஜார்ஜ் சிறையில் அடைக்கப்பட்டார்.