“தமிழக கிராம உள்ளாட்சி அமைப்புகளில் பிசி, எம்பிசி பிரிவினருக்கு 12.39% மட்டுமே பிரதிநிதித்துவமா?” – ராமதாஸ்

சென்னை: “கிராம உள்ளாட்சிகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைத்திருக்கும் பிரதிநிதித்துவம் எவ்வளவு என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒட்டுமொத்தமாகவே 12.39% மட்டும்தான் பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பதாக மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பாலானவை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஆளுகைக்குள்தான் இருப்பதாக நம்பப்பட்டு வரும் நிலையில், இந்த புள்ளி விவரம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் சார்பில் இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் (Indian Institute of Public Administration – IIPA) மூலம் மேற்கொள்ளப்பட்ட ‘Status of Devolution to Panchayats in States’ என்ற தலைப்பிலான அறிக்கையில்தான் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. கிராம ஊராட்சிகளில் 12.16%, ஊராட்சி ஒன்றியங்களில் 15.42%, மாவட்ட ஊராட்சிகளில் 17.25% பிரதிநிதித்துவம் மட்டும்தான் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருப்பதாகத் தெரிகிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்த புள்ளிவிவரங்களை நம்ப முடியவில்லை. அதே நேரத்தில் இந்த புள்ளி விவரங்கள் அடங்கிய அறிக்கை தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளால் அளிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு தான் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதால் அதை நம்பாமல் புறக்கணிக்கவும் முடியவில்லை.

கிராம அளவில் நிலவும் சமூகக் கட்டமைப்புகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது கிராமங்களில் சமூக, பொருளாதார செல்வாக்குடன் திகழ்பவர்கள் அதைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் நடைமுறை இருப்பதைப் பார்க்கும்போது இந்த புள்ளி விவரம் உண்மையானதாக இருக்க வாய்ப்புள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த புள்ளி விவரங்கள் குறித்து தமிழக பஞ்சாயத்து ராஜ் துறையின் செயலாளர் ககன் தீப் சிங் பேடியிடம் கேட்டபோது, கிராம உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் அல்லாமல் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பொதுப் பிரிவினர் சேர்ந்து பல்வேறு நிலைகளில் 62% முதல் 76% வரை பிரதிநிதித்துவம் பெற்றிருப்பதாகக் கூறியுள்ளார்.

இதை மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ்நாட்டில் பொதுப்பிரிவினர்தான் உள்ளாட்சி அமைப்புகளில் 50%-க்கும் கூடுதலான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளனர் என்று தோன்றுகிறது. இது உண்மையான சமூக நீதி அல்ல.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநிலையை முன்னேற்றி விட முடியாது. அவர்களுக்கு அரசியல் அதிகாரம், அதிலும் குறிப்பாக உள்ளூர் அளவில் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான கிராம உள்ளாட்சி அமைப்புகளில் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

எனவே, கிராம உள்ளாட்சிகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைத்திருக்கும் பிரதிநிதித்துவம் எவ்வளவு என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அந்த பிரதிநிதித்துவம் அவர்களின் மக்கள் தொகையை விட குறைவாக இருக்கும் பட்சத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு வரும் கூட்டத் தொடரின் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.