தருமபுரி: தருமபுரி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்ததில் அங்கு பணியாற்றிய 3 பெண்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த வெதரம்பட்டி ஊராட்சி சின்னமுருக்கம்பட்டியில், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடிபொருட்கள் தயாரிக்கும் பட்டாசு குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கு திங்கள்கிழமை பிற்பகல் வழக்கம்போல குடோனில் செண்பகம், திருமலர், மஞ்சு உள்ளிட்ட நான்கு பெண்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் மதிய உணவுக்காக வெளியே சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது பிற்பகல் நேரத்தில் இந்த குடோனில் எதிர்பாராத விதமாக, வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில், குடோனில் வேலை செய்து கொண்டிருந்த செண்பகம், திருமலர், மஞ்சு ஆகிய 3 பெண்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீப்பற்றி எரிந்த குடோன் பகுதியில் பரவிய தீயை அணைத்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த கம்பை நல்லூர் போலீஸார் விபத்து பகுதியில் திரண்டிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தி, விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பெண்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.