திருத்தணி: திருத்தணி ரயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு பெயிண்டால் அழித்த திமுகவினர் 22 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக திமுக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கிரண் தலைமையில், 20-க்கும் மேற்பட்டோர் இன்று மதியம் திருத்தணி ரயில் நிலையத்தில் திரண்டு, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
தொடர்ந்து, அவர்கள் ரயில் நிலையத்தின் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது நடைமேடைகளில் உள்ள ரயில் நிலைய பெயர் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு பெயிண்டால் அழித்தனர்.
இதுகுறித்து, தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடம் விரைந்தனர். தொடர்ந்து, அவர்கள் வழக்குப்பதிவு செய்து, கிரண் உள்ளிட்ட 22 பேரை கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.