புதுடெல்லி: பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்காக நிரந்தரமான அடிப்படைக் கட்டமைப்புகள் அவசியம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார். மேலும், உ.பி. பாஜக அரசையும் அவரை கடுமையாக விமர்சித்தார்.
உ.பி.யின் எதிர்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைமையகத்தில் இன்று (பிப்.24) தொழிலாளர்கள் மற்றும் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில், மக்களவை எம்.பி.யும், உ.பி.யின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் உரையாற்றினார். இக்கூட்டத்தில் அவர் பேசியது: “மகா கும்பமேளா என்பது துறவிகள், மத தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கைக்குரிய ஒரு மத நிகழ்வு. ஆனால், பாஜக அரசாங்கம் அதை ஓர் அரசியல் நிகழ்வாக மாற்ற வேலை செய்தது. மகா கும்பமேளாவை சுமுகமாக நடத்துவதில் பாஜக அரசு தோல்வியடைந்துள்ளது. அவர்களால் கூட்டத்தை நிர்வகிக்கவோ, பக்தர்களுக்கான போக்குவரத்தை ஏற்பாடு செய்யவோ, குளிப்பதற்கான சுத்தமான தண்ணீரை வழங்கவோ முடியவில்லை.
கங்கை நீர் தொடர்பான மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிக்கை பாஜக அரசாங்கத்தின் தோல்விக்கான ஆவணமாகும். கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், கங்கை நதியை சுத்தம் செய்ய முடியவில்லை. கும்பமேளாவை நடத்துவதற்கு நிரந்தர மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, சமாஜ்வாதி கட்சி எந்த வகையான ஆலோசனை தேவைப்பட்டாலும் அதை வழங்க தயாராக உள்ளது.
மத்திய அரசு பிரயாக்ராஜ் கோட்டையை உத்தரப் பிரதேச அரசிடம் ஒப்படைக்க வேண்டும். கும்பமேளாவை ஏற்பாடு செய்ய, மத்திய மற்றும் உத்தரப் பிரதேச அரசுகள் இணைந்து ரூ.2 லட்சம் கோடி நிதியை உருவாக்க வேண்டும். இதில், மாநில அரசு ஒரு லட்சம் கோடி ரூபாயையும், மத்திய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாயையும் வழங்க வேண்டும். இதன் மூலம், ஒரு லட்சம் கோடி ரூபாய் கார்பஸ் நிதியிலிருந்து நிரந்தர உள்கட்டமைப்பை உருவாக்க முடியும். மேலும், கும்பமேளாவுக்கு வரும் ஏழை பக்தர்களுக்கான போக்குவரத்து அமைப்பு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி ரூபாய் பயன்படுத்த முடியும்.
மத்திய, மாநில அரசுகளின் மோதல்: இதனால், மகா கும்பமேளாவில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஒருபோதும் நடக்காது. இந்த முறை நடந்தது போன்ற சூழ்நிலைகள் ஏற்படாது. பாஜகவின் இரட்டை இன்ஜின் அரசாங்கம் தவறு. இப்போது சங்கமத்தில் கங்கை நீர் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் மோதிக் கொள்கின்றன.
பொதுமக்கள் ஏமாற்றம்: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அளித்துள்ள அறிக்கைகள் தொடர்பாக மோதிக் கொள்கின்றன. பாஜக அரசாங்கத்தின் நிறுவனங்களுக்கு இடையிலான மோதலைப் பார்க்கும்போது, பொதுமக்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள்.
சுத்தமானத் தண்ணீர்: மகா கும்பமேளாவில் புனித நீராடுவதற்கு சுத்தமான தண்ணீருக்கான ஏற்பாடுகளைக் கூட செய்ய முடியவில்லை. மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பாஜக அரசின் தோல்வி. கூட்ட நெரிசல் பற்றிய தகவல்களை அரசாங்கம் தொடர்ந்து மறைத்து வந்தது.
விபத்துக்களால் இறப்பு: கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய சரியான தகவல்கள் வழங்கப்படவில்லை. மக்கள் தங்கள் உறவினர்களைப் பற்றிய தகவலுக்காக அலைந்து கொண்டே இருந்தனர். மகா கும்பமேளாவுக்குச் செல்லும் மற்றும் வரும் வழியில் ஏற்பட்ட விபத்துகளில் ஏராளமான மக்கள் இறந்தனர்.
அரசாங்கத்தின் பொய்: இறந்தவர்கள் குறித்து அரசாங்கம் எந்தத் தகவலையும் வழங்கவில்லை அல்லது அவர்களது குடும்பங்களுக்கு எந்த நிதி உதவியும் வழங்கவில்லை. மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அரசு பொய் சொல்லிக்கொண்டே இருந்தது.
காவி ஆடை: காவி ஆடை அணிவதால் ஒருவர் யோகியாகிவிடமாட்டார். ஒரு நபர் தனது மொழி மற்றும் நடத்தை மூலம் யோகியாகிறார். மகா கும்பமேளாவில் இன்னும் ஏராளமான மக்களால் குளிக்க முடியவில்லை. இன்னும் கோடிக்கணக்கான மக்கள் குளிக்க வேண்டியுள்ளது.
நேர்மை அம்பலம்: பாஜகவிடம் தகுதியோ திறமையோ இல்லை. இந்த முறை கும்பமேளாவில் பக்தர்களின் நிலைமை இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இருந்தது. கும்பமேளாவின் போது ஏற்பட்ட விபத்துகளும் குழப்பங்களும் பாஜக அரசாங்கத்தின் நேர்மையை அம்பலப்படுத்தியுள்ளன. இந்த அரசாங்கத்தின் திறமையின்மையால், உத்தரப்பிரதேசம் உலகம் முழுவதும் அவப்பெயரை அடைந்துள்ளது” என்று அவர் பேசினார்.