துபாய்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்நிலையில், துபாயில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 241 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து 242 ரன் என்ற இலக்கை நோக்கி களம் கண்ட இந்தியா 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 244 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் சீனியர் வீரரான விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
முன்னதாக, இந்தப் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கிங் என்று அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடும் பாபர் அசாம் 23 (26) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதேசமயம் இந்தியாவின் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இந்நிலையில், விராட் கோலி ‘கிங்’ என்று அழைக்கத் தகுதியானவர் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
விராட் கோலி பெரிய இடத்தில் அசத்தக்கூடியவர். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் போது உங்களுக்கு அசத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவுக்கு எதிராக சோயப் மாலிக் நன்றாக பவுலிங் செய்ததாலும், ஷாகித் அப்ரிடி சிக்ஸர்கள் அடித்ததாலும் நட்சத்திரங்களாக உருவெடுத்தார்கள். அதே போல விராட் கோலி காத்திருந்து அது போன்ற தருணங்களை பயன்படுத்திக் கொள்கிறார்.
தொடர்ந்து நேர்மறையான மனநிலையைக் கொண்டுள்ள அவர் இந்தியாவுக்காக விளையாடுவது மட்டுமின்றி என்னுடைய நாட்டுக்காக வெற்றியையும் பெற்றுக் கொடுப்பேன் என சிந்திக்கிறார். அதனாலேயே அவர் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார். எதார்த்தமான வாழ்வில் யாராவது கிங் என்று அழைப்பதற்கு தகுதியானவர் என்றால் அது விராட் கோலி.
பாபர் அசாம் கிடையாது. விராட் கோலியின் செயல்பாடுகளை பாருங்கள். அவர் உலகம் முழுவதிலும் அசத்தியுள்ளார். பணத்துக்காக மக்கள் தொடர்பு நிர்வாகிகளை வைத்து கிங்காக வரவில்லை. அவர்களை அழைத்து விராட் கோலியின் செயல்பாடுகளை கண்ணாடியில் காட்டுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.