ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேவேளையில் 2-வது தோல்வியை பதிவு செய்த பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
விராட் கோலி 14,000 ரன்கள்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 15 ரன்களை எடுத்திருந்த போது சர்வதேச ஒருநாள் போட்டியில் 14 ஆயிரம் ரன்களை எட்டினார். 287 இன்னிங்ஸ்களில் இந்த மைல் கல் சாதனையை அவர் எட்டி உள்ளார். இதன் மூலம் 14 ஆயிரம் ரன்களை விரைவாக சேர்த்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 350 இன்னிங்ஸ்களில் 14 ஆயிரம் ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடித்து தற்போது புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார் விராட் கோலி.
மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். இந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் (18,426), குமார் சங்ககரா (14,234) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.
158 கேட்ச்கள்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 2 கேட்ச்கள் செய்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்ச்கள் செய்திருந்த இந்திய வீரர்களில் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனின் சாதனையை முறியடித்தார்.
அசாரூதீன் 156 கேட்ச்கள் செய்திருந்தார். விராட் கோலி 158 கேட்ச்கள் எடுத்துள்ளார். இந்த வகை சாதனையில் இலங்கையின் ஜெயவர்தனே (218), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (160) முதல் இரு இடங்களில் உள்ளனர்.
விரைவாக 9,000: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் சர்மா ஒரு ரன் எடுத்திருந்தபோது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விரைவாக 9 ஆயிரம் ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த மைல் கல் சாதனையை அவர், 181 இன்னிங்ஸில் எட்டி உள்ளார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 197 இன்னிங்ஸ்களில் 9 ஆயிரம் ரன்களை குவிந்திருந்ததே சாதனையாக இருந்தது.
ஓரே ஓவரில் 11 பந்து: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் ஓவரை வீசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 11 பந்துகளை வீசினார். இதில் 5 அகலப்பந்துகள் (வைடு) அடங்கும். இதன் மூலம் ஒரே ஓவரில் அதிக பந்துகளை வீசிய ஜாகீர்கான், இர்பான் பதான் ஆகியோருடன் மோசமான சாதனையை பகிர்ந்து கொண்டார் முகமது ஷமி. ஜாகீர்கானும், பதானும் ஒரே ஓவரில் தலா 11 பந்துகளை வீசியிருந்தனர்.
மேலும் முகமது ஷமியின் ஓவர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் மூன்றாவது நீண்ட ஓவராக அமைந்தது. அவர், 11 பந்துகளை வீசியிருந்தார். இந்த வகையில் வங்கதேசத்தின் ஹசிபுல் ஹொசைன், ஜிம்பாப்வேயின் டினாஷே பன்யங்கரா ஆகியோர் தலா 13 பந்துகளை ஒரே ஓவரில் வீசி முதலிடங்களில் உள்ளனர்.