சென்னையில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு, ‘மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கருத்தரங்கு’ என்ற ஒரு கருத்தரங்கை நடத்தியது.
திரைப்பிரபலங்கள் பலரும் இந்த கூட்டமைப்பில் கலந்துக் கொண்டு பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். அந்த வரிசையில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனுஷின் 55-வது திரைப்படம் குறித்தான சில தகவல்களையும் பகிர்ந்திருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு `அமரன்’ திரைப்படம் வெளியாகியிருந்தது.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, “ இந்தப் படத்திற்கு நான் தனுஷ் சார் மாதிரியான நடிகரைதான் தேடிக் கொண்டிருந்தேன். இந்தப் படத்தின் கதையும் அவரின் நடிப்பு திறனுக்கு சில விஷயங்களைக் கொடுக்கும். இந்தப் படத்தின் கதை முழுமையாக அவருக்கு எழுதப்பட்டது கிடையாது. எந்த கதையையும் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரத்தை அவர் வைத்திருக்கிறார். நான் அவரை சந்திக்கும்போது என்னிடம் எந்தக் கதைக்கான ஐடியாவும் இல்லை. அந்த சந்திப்புக்குப் பிறகு நான் அவருக்கு பொருந்திப்போகும் என நினைக்கும் எந்த கதையாக இருந்தாலும் அவரிடம் சொல்வதற்கு ஒரு கம்போர்ட்டைக் கொடுத்தார்.

நான் திரையில் இப்படி தெரிய வேண்டும், நான் இப்படியான கதாபாத்திரத்தில்தான் நடிக்க வேண்டும், இப்படியான சில கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என எந்த பாராமீட்டரும், விதிகளும் அவரிடம் இல்லை. இரண்டாவது முறை நான் அவரைச் சந்தித்து அவரிடம் இரண்டு கதைக்கான ஐடியாவைச் சொன்னேன். அந்த இரண்டு ஐடியாவுமே அவருக்குப் பிடித்திருந்தது. அதில் ஒரு கதையில்தான் தற்போது கவனம் செலுத்தி வேலை செய்து வருகிறோம். இந்தக் கதையும் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான்.” எனக் கூறியிருக்கிறார்.