‘அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றுவேன்’ என்று ட்ரம்ப் பிரசாரத்தில் கூறியதுபோல, அவர் அதிபரானதும் அந்த வேலையில் விறுவிறுவென களமிறங்கி செயல்பட்டு வருகிறது அமெரிக்க அரசு.
இந்த மாதத் தொடக்கத்தில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய இந்தியர்களை கைவிலங்கிட்டு அமெரிக்காவின் ராணுவ விமான மூலம் வெளியேற்றியது ட்ரம்ப் அரசு. பஞ்சாப் அமிர்தசரஸில் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வந்திறங்கினர். இந்தியர்களை கை, கால் விலங்கிட்டு ராணுவ விமானத்தில் அனுப்பியது ‘மனிதாபிமானமற்ற செயல்’ என்று நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பியது.
‘இது அமெரிக்காவின் வழக்கமான நடைமுறை தான்’ என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறி, இந்த எதிர்ப்புகளை கடந்தார்.

அடுத்தடுத்து அமெரிக்கா சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய இந்தியர்களை தொடர்ந்து வெளியேற்றி வருகிறது. அதில் நான்காவது கட்டமாக, சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய 12 இந்தியர்களை மத்திய அமெரிக்காவில் உள்ள பனாமாவிற்கு அனுப்பியது அமெரிக்கா அரசு. அவர்கள் அங்கிருந்து நேற்று மாலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர்.
தரவுகளின் படி, ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து கிட்டத்தட்ட 350 சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.