IPL 2025, CSK: சென்னை சூப்பர் கிங்ஸில் இருந்து பிராவோ விலகிய நிலையில், புதிய உதவி பௌலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஒருவரை நியமித்துள்ளது. சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த டுவைன் பிராவோ, தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் கூட முழுவதுமாக இல்லை எனலாம். ஒருபக்கம், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வந்தாலும், 10 ஐபிஎல் அணிகளும் தொடருக்கு தயாராகி வருகின்றன. எவ்வித போட்டிகளிலும் விளையாடாத வீரர்கள் தங்களின் அணிகளின் முகாமில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9ஆம் தேதி நிறைவடைகிறது. ஐபிஎல் தொடர் மார்ச 21ஆம் தேதி தொடங்குகிறது. அந்த வகையில், ஐபிஎல் தொடரில் விளையாடும் அனைத்து சர்வதேச வீரர்கள் பாகிஸ்தான் – துபாயில் இருந்து இந்தியாவுக்கு வந்து தங்களின் பயிற்சிகளை தொடங்குவார்கள். மார்ச் இரண்டாம் வாரத்தில் இருந்தே வீரர்கள் அணியின் முகாமில் இணைந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களும் விரைவில் சென்னை வருவார்கள் என கூறப்படுகிறது. கேப்டன் ருதுராஜ், நட்சத்திர வீரர் தோனி உள்ளிட்டோர் சிஎஸ்கே பயிற்சி முகாமில் விரைவில் இணைய வாய்ப்புள்ளது. வழக்கமாக சிஎஸ்கே வீரர்கள் சேப்பாக்கத்தில்தான் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
ஆனால், தற்போது சேப்பாக்கத்தில் சில சீரமைப்பு பணிகள் நடப்பதாலும், ரசிகர்களின் வருகையை தடுப்பதற்காகவும் சென்னையின் புறநகர் பகுதியான நாவலூரில் அமைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் இந்தாண்டு பயிற்சி மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.