ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் கிகர், ட்ரைபர் மற்றும் க்விட் என மூன்று கார்களிலும் சிஎன்ஜி ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. அரசால் அனுமதிக்கப்பட்ட முறையில் பொருத்தும் வகையில் சிஎன்ஜி டேங்க் உட்பட அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மூலம் பொருத்தி தரப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ட்ரைபர் மற்றும் கிகர் மாடல்களுக்கு கட்டணம் ₹79,500 மற்றும் க்விட் மாடலுக்கு ₹75,000 விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக ஹரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா என 5 மாநிலங்களில் மட்டும் கிடைக்க உள்ளது. அடுத்த, சில மாதங்களில் நாடு முழுவதும் விரிவுப்படுத்த உள்ளது. மூன்று ஆண்டுகள் வரை சிஎன்ஜி வாகனங்களுக்கு வாரண்டி வழங்கப்படுகின்றது.
ஏஎம்டி, டர்போ மாடல்களைத் தவிர மற்ற அனைத்து வேரியண்டிலும் வாடிக்கையாளர்கள் விரும்பினால் பொருத்திக் கொள்ளலாம்.
ரெனால்ட் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், நாட்டின் தலைமை நிர்வாக அதிகாரியுமான வெங்கட்ராம் எம். கூறுகையில், இந்த முயற்சி சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளை வழங்குவதில் நிறுவனத்தின் கவனம் செலுத்துவதோடு ஒத்துப்போகிறது. டீலர் நெட்வொர்க் முழுவதும் சீரான தரத்தை பராமரிக்க தரப்படுத்தப்பட்ட பொருத்துதல் செயல்முறை உருவாக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகள் மற்றும் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் கவலைகளுக்கு மத்தியில் இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் மாற்று எரிபொருள் விருப்பங்களை விரிவுபடுத்தி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.