தெலங்கானாவில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் திட்டத்திற்காக சுரங்கப்பாதை பணி நடந்து வருகிறது. ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் இருந்து நால்கொண்டாவிற்கு தண்ணீர் கொண்டு வருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
ஹைதராபாத்தில் இருந்து 120 கிலோமீட்டருக்கு போடப்பட்டு வரும் இந்தத் திட்டத்தில் நேற்று முன்தினம் பயங்கர விபத்து நடந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை காலை சுமார் 8.30 மணியளவில் நகர்குர்னூல் மாவட்டத்தில் நடந்துவரும் இந்தத் திட்டத்தின் 14 கி.மீ சுரங்கப்பாதையில் மேல்பகுதி இடிந்து கீழே விழுந்துள்ளது. வெளியாகியுள்ள தரவுகளின் படி, இந்த இடிப்பாடுகளில் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரம் அருகில் 8 பேர் சிக்கியுள்ளனர். இந்த 8 பேரில் இருவர் இன்ஜீனியர்கள் ஆவார்கள்.

மலையை குடைந்து நடந்துவரும் இந்தப் பணியில் கிட்டதட்ட 50 பேர் வேலை செய்து வந்திருக்கின்றனர். 8 பேரை தவிர, மீதம் இருப்பவர்கள் இந்த விபத்தில் இருந்து தப்பியுள்ளனர்.
இடிப்பாடுகளில் சிக்கிக்கொண்டுள்ளவர்களை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால், அந்த இடிபாடுகளில் அவர்களுக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் தரப்பட்டு வருகிறது.
இவர்களை மீட்க இந்திய ராணுவம், தேசிய மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட மீட்பு குழுக்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
சுரங்கப்பாதையில் ஏற்பட்டுள்ள நீர்த்தேக்கம் காரணமாக, விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க குறிப்பிட்ட சில கருவிகளை பயன்படுத்த முடியவில்லை. அதனால், நீரை நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்று மீட்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க உதவிய குழுவையும் இந்த மீட்பு பணியில் ஈடுபடுத்தவுள்ளனர்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play
