அமராவதி: ஆந்திராவில் காட்டுவழியாக அதிகாலையில் கோயிலுக்குச் சென்ற பக்தர்களை யானைக் கூட்டம் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர், 3 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், “செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு தலகோணா கோயிலுக்குச் சென்ற 30 பேர் அடங்கிய பக்தர்கள் குழுவை யானைக் கூட்டமொன்று தாக்கியதில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர், 3 பேர் காயமைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மற்ற இருவர் ஆபத்தான கட்டத்தைத் கடந்து விட்டனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் பெண், இருவர் ஆண்கள்.
பக்தர்கள் தாக்கப்பட்ட காட்டுப்பகுதி, ஒபுலவாரிபல்லே மண்டலத்தில் உள்ள ஒய் கோட்டா பகுதியில் உள்ளது. கோயிலுக்குச் சென்றவர்களைத் தாக்கிய யானைக் கூட்டத்தில் 15 யானைகள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.” என்று தெரிவித்தனர்.
இதனிடையே, உயிரிழந்த பக்தர்களின் உடல்களை போலீஸார் மீட்டனர். தாக்குதலில் இருந்து தப்பித்த பக்தர்களை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, இத்துயரச் சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண், யானை தாக்கிய சம்பவம் குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸாரிடம் விசாரித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மகாசிவராத்திரியை முன்னிட்டு வனப்பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புகள் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.