கீவ்,
உக்ரைன் – ரஷியா இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு போர் ஏற்பட்டது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியது. பதிலுக்கு உக்ரைனும் ரஷியா மீது பதிலடி கொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட பல்வேறு மேற்கத்திய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருகின்றன.
இதனால், ரஷியாவுக்கு கடும் சவாலை உக்ரைன் அளித்து வருகிறது. இந்த போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைனில் இருந்து ரஷிய படைகளை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பதற்றத்தைக் குறைக்கவும், போர் நடவடிக்கைகளை முன்கூட்டியே நிறுத்தவும், உக்ரைனுக்கு எதிரான போரை அமைதியான முறையில் தீர்க்கவும் இந்த தீர்மானம் வலியுறுத்தியது.
இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்து உள்ளது. தீர்மானத்துக்கு 93 நாடுகள் ஆதரவாகவும், அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட 18 நாடுகள் எதிராகவும் ஓட்டளித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு காரணமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா உட்பட 63 நாடுகள் இந்த ஒட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. ரஷியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.