புதுடெல்லி: எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை மோடி அரசு பறித்துவிட்டது. நாட்டின் பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதும், திறன்களை ஊக்குவிப்பதும் நடக்காவிட்டால் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் எவ்வாறு அதிகரிக்கும்.
மோடி ஆட்சியில் குறைந்தபட்சம் 21% முதல் அதிகபட்சம் 94% வரை கல்வி உதவித் தொகை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை 57 சதவீதமும், ஓபிசி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை 77 சதவீதமும், சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை 94 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது.
11-ம் வகுப்பு முதல் பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையில் பட்டியல் சமூக மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை 13 சதவீதமும், பட்டியல் பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை 21 சதவீதமும், ஓபிசி பிரிவினருக்கான கல்வி உதவித் தொகை 58 சதவீதமும், சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை 83 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், இலவச பயிற்சிகளுக்கான கல்வி உதவித் தொகையில் எஸ்சி, ஓபிசி பிரிவினருக்கு 83 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. இந்த வெட்கக்கேடான அரசாங்க புள்ளி விவரங்கள், மோடி அரசாங்கம் அனைத்து உதவித்தொகைகளிலும் பயனாளிகளை வெகுவாகக் குறைத்தது மட்டுமல்லாமல், சராசரியாக ஆண்டுதோறும் 25% குறைவான நிதியையும் செலவிட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
மோடி அவர்களே, எல்லோருடனும் இணைந்து எல்லோருக்குமான வளர்ச்சி என்ற உங்கள் முழக்கம் ஒவ்வொரு நாளும் பலவீனமான பிரிவுகளின் விருப்பங்களை கேலி செய்கிறது” என்று கார்கே சாடியுள்ளார்.