நியூயார்க்: ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட 2 தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை முன்னிட்டு உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காண, ஐ.நா பொதுச் சபையில் அமெரிக்கா ஒரு தீர்மானமும், உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஒரு தீர்மானமும் கொண்டு வந்தன.
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில், ‘‘ரஷ்யா-உக்ரைன் இடையேயான மோதலுக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். உக்ரைன் – ரஷ்யா இடையே நீடித்த அமைதி நிலவ வேண்டும். பிரச்சினைக்கு அமைதியான வழியில் தீர்வு கண்டு அமைதியையும், பாதுகாப்பை ஐ.நா பராமரிக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தது. ஆனால் இந்த தீர்மானத்தில் ரஷ்யாவை ஊடுருவல் நாடு என்று அமெரிக்கா குறிப்பிடவில்லை. மேலும் உக்ரைனின் இறையாண்மையும் அங்கீகரிக்கவில்லை.
உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தில், ‘‘ உக்ரைனில் ரஷ்யாவின் ஊடுருவல் 3 ஆண்டுகளாக நீடிப்பது கவலையளிக்கிறது. இது உக்ரைனுக்கு மட்டும் அல்லாமல், இதர பகுதிகளுக்கும், உலகளாவிய நிலைத்தன்மைக்கும் நீடித்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய போர் கண்டனத்துக்குரியது. உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகள் உடனடியாக திரும்பபெறப்பட்டு, அமைதியான தீர்வை ஏற்படுத்த வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஐ.நா பொதுச் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த 2 தீர்மானங்களுக்கு ஆதரவாக 93 நாடுகள் ஓட்டளித்தன. எதிராக 18 நாடுகள் வாக்களித்தன. இந்த இரண்டு தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பிலும் இந்தியா பங்கேற்கவில்லை. இந்தியா உட்பட 65 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் நடுநிலை வகிக்கவில்லை, அமைதியின் பக்கம் உள்ளது என கூறிவரும் இந்தியா இந்த தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீர்மானத்தில் கொண்டுவரப்பட்ட சில திருத்தங்களால், இந்தியா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் 3 திருத்தங்கள் செய்ய வேண்டு என ஐரோப்பிய நாடுகள் கூறின. ‘ரஷ்யா-உக்ரைன் பிரச்சினை’ என்பதை உக்ரைனில் ரஷ்யா ஊடுருவல் என மாற்ற வேண்டும் என கூறியது. உக்ரைனின் இறையாண்மை, சுதந்திரம், அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச எல்லைகள் ஐ.நா உறுதி செய்ய வேண்டும். நீதி, நீடித்த அமைதி என்பதற்கு பதில் நீதி, நீடித்த மற்றும் விரிவான அமைதி’ என குறிப்பிட வேண்டும் எனவும் ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தின. பிரச்சினைக்கான அடிப்படை காரணத்துக்கு தீர்வு காண வேண்டும் என ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்க கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து வாக்களித்தன. இது அமெரிக்க கொள்கையில் திடீரென ஏற்பட்ட மாற்றமாக கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வந்த அமெரிக்கா, தற்போது ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
போருக்கு தீர்வு காண ரஷ்யாவும், உக்ரைனும் தூதரக அளவில் பேச்சுவார்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது. ஐ.நா பொதுச் சபையில் இதற்கு முன் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திலும் இந்தியா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அமெரிக்கா போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து ரஷ்யாவுடன் நேரடி பேசு்சுவார்த்தை நடத்துகிறது.