புதுடெல்லி: டெல்லி தேர்தலுக்கு பிறகு அரசியல் நிகழ்ச்சிகள் மந்தமாக இருந்தாலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவ்வாறு இல்லை.
பிரதமர் மோடி நேற்று முன்தினம் திங்கட்கிழமை 3 மாநிலங்களில் பயணம் மேற்கொண்டார். இதையொட்டி அவர் ம.பி.யில் காலை உணவையும் பிஹாரில் மதிய உணவையும் அசாமில் இரவு உணவையும் எடுத்துக்கொண்டார்.
பிரதமர் மோடி நேற்று முன்தினம் ம.பி.யில் உலக முதலீட்டாளர் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில் அவர், உலக முதலீட்டாளர்கள் இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்ப்பதாக கூறினார். ம.பி.யை முதலீட்டுக்கு உகந்த இடமாக முன்னிறுத்தினார்.
பிற்பகலில் பிரதமர் பிஹாரின் பாகல்பூரை அடைந்தார். பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இதையொட்டி மோடியின் முதல் கூட்டமாக இது பார்க்கப்பட்டது. இக்கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 9.8 கோடி விவசாயிகளுக்கு பிரதமர்-கிசான் நிதியிலிருந்து ரூ.22,000 கோடியை பிரதமர் விடுவித்தார். மேலும் ரூ.24,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து பிரதமர் தனது விமானத்தில் புறப்பட்டு இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலத்தின் குவாஹாட்டியை அடைந்தார். தேயிலை தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் அவர் பங்கேற்றார். பழங்குடியினத்தை சேர்ந்த 9 ஆயிரம் பெண்கள் பாரம்பரிய நடனமாடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.