புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் (கேடிஎஸ்) 3.0 நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கடந்த 2023 நவம்பரில் நடத்தப்பட்ட கேடிஎஸ் 2.0 வில் அகத்தியர் பிறந்த நாள் விழா மற்றும் அவரை பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. அதை தொடர்ந்து இந்த ஆண்டு கேடிஎஸ் நிகழ்ச்சியில் அகத்தியர் கருப்பொருளாக தேர்வு செய்யப்பட்டார்.
காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஷாமா பட்டின் பெற்றோர், பல ஆண்டுகளுக்கு முன்பே கர்நாடகாவுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த ஷாமா பட், மங்களூருவில் பிரபல வழக்கறிஞராக பணியாற்றுகிறார். இவர்தான் அகத்தியர் பற்றி அறிந்து அதை ஆதாரங்களுடன் பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி உள்ளார்.
இதை படித்து வியப்படைந்த பிரதமர் மோடி, அகத்தியரின் பெருமையை காசி தமிழ்ச் சங்கமங்கள் மூலமாக வெளிப்படுத்த முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து கேடிஎஸ் 3.0 நிகழ்ச்சிக்கு வந்த வழக்கறிஞர் ஷாமா பட், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது: மைசூரில் எங்களது விளை நிலங்கள், நிலச் சீர்திருத்தச் சட்டத்தால் இந்து, முஸ்லிம் குடும்பங்களிடம் சென்று விட்டன. அங்கு நான் ஒருமுறை நேரில் சென்றபோது அந்த நிலத்தில் அதிகளவில் நாகப் பாம்புகள் வருவதாகத் தெரிவித்தனர். அப்போதுதான், அந்த நிலத்தில் கோயில் இருந்திருக்கலாம் என்ற ஐயம் எழுந்தது. அதன்பின், கிருஷ்ண நாயக் நிலத்தில் அகழாய்வு செய்ததில் துர்கை அம்மன் கோயிலின் அடித்தளம் கிடைத்தது.
இக்கோயிலை மீண்டும் கட்ட விரும்பி நான் நாயக்குக்கு மாற்று நிலம் கொடுத்து விட்டேன். இந்த கோயிலை பற்றி அகத்தியரின் பெருநூல் காவியம் பாடல்களில் இடம்பெற்றதையும் கண்டறிந்தேன். இப்படித்தான் நான் அகத்தியரைப் பற்றிய தேடலுக்கு சென்றேன். தமிழக அரசுத் துறையில் பணியாற்றிய முனைவர் பி.கார்த்திகேயன் ஆங்கிலத்தில் எழுதிய ‘History of Medical Sciences of Siddhas of Tamilnadu (மருத்துவ அறிவியல் வரலாற்றில் தமிழ்நாட்டின் சித்தர்கள்)’ எனும் நூலை படித்தேன்.
தமிழகத்தின் பழங்கால சித்தர்களை நன்கு ஆராய்ச்சி செய்து அவர் எழுதியுள்ளார். இந்த நூல் என்னை தமிழ் இலக்கியத்தை நோக்கி பயணிக்க வைத்தது.
எனக்கு கிடைத்த அகத்தியர் பற்றிய தகவல்களை, மத்திய கல்வி அமைச்சகப் பிரிவான பாரதிய பாஷா சங்கத் தலைவர் பத்ம சாமு கிருஷ்ண சாஸ்திரியிடம் தெரிவித்தேன். அவர்தான் பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அதன்பிறகு பிரதமரின் ஆலோசனைப்படி கேடிஎஸ் 3.0-ன் கருப்பொருளாக அகத்தியர் இடம் பெற்றுள்ளார். கர்நாடகாவின் தளகிரியில் அகத்தியரின் ஓலைச்சுவடிகள் நிறைந்துள்ளன. அகத்தியர் தன் பாடல்களில் மனித சமூகம், நிலம், விலங்குகள் பற்றியும் ஏராளமான தரவுகளைப் பதிவு செய்துள்ளார். இதனால் அகத்தியரின் ஓலைச் சுவடிகள் மொழியாக்கம் செய்ய வேண்டிய தேவையை உணர்ந்து அதிலும் இறங்கியுள்ளேன். இவ்வாறு ஷாமா பட் கூறினார்.