வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
அடிவானத்தில் ஆதவனின் வரவுக்கு கட்டியம் சொல்வதைப்போல் ஆரஞ்சு வண்ணப் பரவல்.. மேகக் காதலனை பிரிய மனமின்றி நிலவு காதலி அவனுக்குள் முகம் புதைத்து காணாமல் போகிற காலை நேரம்..பறவைகளின் கீச் கீச் ஒலியில் பூபாளத்தில் சாயல்..
“மா.. எழுந்துக்கோம்மா .. நேரமாகுதுல்ல ..வேலைக்கு போக வேணாமா ..” அவனது காதுகளுக்குள் அவளது குரல் குழைவாய் ஒலித்தது.
அவள் அப்படித்தான் அவனை அழைப்பாள் ..
“அடியே அசமஞ்சம் .. இன்னும் பொழுதே விடியலையே டி.. அதுக்குள்ளவே எழுந்துக்கணுமா.. கொஞ்ச நேரம் தூங்க விடேன் டி.. ” அவன் சிணுங்கலாய்ச் சொல்ல,
“எழுந்துக்கோம்மா ..அப்புறமா நேரமாச்சு னு பதறிக்கிட்டு வேகமா டிரைவ் பண்ணுவ .. ” , அவளது குரல் மீண்டும் அவனை எழுப்பியது.
அவனது முன்னுச்சிமுடியில் அவளது விரல்களின் கோதலை உணர்ந்தவன் ,மெதுவாய் கண்விழித்துப் பார்த்தான் ..அடடா கனவா.. என்ன இது ..இவ்வளவு நாள் கழிச்சு திடீர்னு இப்படி ஒரு கனவு?
தலையை உலுக்கிக் கொண்டு விழித்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான். நல்லவேளை குழந்தைகள் யாரும் பக்கத்துல இல்லை. கனவில் பேசுவதாய் நினைத்துக் கொண்டு நனவில் பேசி விட்டது புரிந்தது. சிறு வெட்கத்துடன் கூடிய முறுவலுடன் எழுந்தவன் வழக்கம் போல் முன்னுச்சி முடியில் கை விட்டு அளைந்தபடி நகர்ந்தான்.
“அந்த முடியை ஏன் அந்த பாடு படுத்துற. சீக்கிரம் எல்லாம் கொட்டி போய் வழுக்கையாக போற பாரு..” சிரிப்புடன் அவள் குரல் மீண்டும் காதில் ஒலித்தது.

அவள் மடியில் குழந்தையைப் போல சுருண்டு கொள்ள வேண்டும் போல் இருந்தது..
அவனது தலைக்குள் விரல்களை நுழைத்து அளைந்து விளையாடியபடி கதை பேசுவாள்.. இப்போதே அவள் மடி வேண்டும் போல் இருந்தது.
“இன்னும் குளிக்க போகலையா..என்ன யோசனை ஐயாவுக்கு..” அவள் குரல் விரட்டியது..
“ராட்சசி ..” செல்லமாக சிரித்துக்கொண்டான் .
குளித்து விட்டு வந்தவன் , அடர் நீலத்தில் சட்டையை எடுத்தான்..
“அது உனக்கு மேட்ச் ஆகாது..அந்த லைட் கலர் போட்டுக்கோ..” மறுபடியும் அவள் தான்..
“நான் என்ன ஸ்கூல் போற குட்டி பையனாடி?” மனசுக்குள் கேட்டுக் கொண்டாலும், அவள் சொன்னதைச் செய்தான்.
“தூள் டா ..” ரசித்துச் சொன்னாள்..
டைனிங் டேபிள் பக்கம் நகர போனவனை, மறுபடி அவள் குரல் நிறுத்தியது.
“சாமி கும்பிட்டு துளி திருநீறு நெத்தில வச்சிக்கிட்டு போனா என்னவாம்?”..
அவளது நம்பிக்கை அது.. திருநீறு நெற்றியில் இருக்க வேண்டும் எப்போதும் அவளுக்கு .. ஒழுங்கா அவன் கூடவே இருந்து பத்திரமா பார்த்துக்கோ என்று தான் வேண்டுவாள் .. கடவுளிடம் கூட அடாவடி தான்..
கண்களை மூடி ஒரு நிமிடம் நின்றவன், சாப்பாட்டு மேசைக்கு நகர்ந்தான் .
மெதுவடையும் , இட்லியும் பரிமாறப்பட்டது. மூன்று இட்லியுடன் எழுந்து கொள்ளப் போனவனை, ” குழந்தையா நீ ? இன்னும் ஒரு இட்லியும், ஒரு வடையும் போட்டுக்கோ” அவளது அக்கறை கலந்த அதட்டல் குரல் தடுத்து நிறுத்தியது .
“போதும் மா ” என்று சொல்ல நினைத்தாலும் , அவள் முகம் வாடுவாளே என்று மீண்டும் அமர்ந்தான்.
“மாத்திரை போட்டியா?.. தினமும் சொல்லனுமா உனக்கு? ” அதட்டலாக நினைவுபடுத்தினாள் .
“ஞாபகமா எல்லத்தையும் எடுத்துக்கோம்மா..பர்ஸ் , மொபைல் , வண்டி சாவி ..நேத்து ஏதோ நோட்ஸ் எடுத்தியே ..எடுத்து வச்சிகிட்டியா ..எப்பவும் சொல்லறது தான்.. டென்ஷன் ஆகாதே..யார் கிட்டயும் கோபப் படாதே … அத விட முக்கியம்..மதியம் நேரத்துக்கு சாப்பிடு ..சரியா ..பத்திரமா போயிட்டு வா…” வாஞ்சையாய் ஒலித்தது அவள் குரல்..

“இன்னும் இடுப்பில தூக்கி வச்சு நிலா காட்டி சாப்பாடு தான் ஊட்டல..மத்தபடி குழந்தையை போலத்தான் பாத்துக்கற நீ..” மனதுக்குள் நினைத்தவன் , வேலைக்கு கிளம்பினான் .
வாசல் தாண்டும் போது ஏதோ உந்த திரும்பிப் பார்த்தான் ..புன்னகை முகத்துடன் கை ஆட்டி விடை கொடுத்தாள் .
காரை ஓட்ட ஆரம்பித்தவனுக்குள் அவளது நினைவுகள் அலை மோத ஆரம்பித்தன .
அவனென்றால் உயிர் அவளுக்கு ..அவனைச் சுற்றியே அவளது நினைவுகள் சுழலும் . ” ஏன்டி நீ இப்படி இருக்க? ” என்றால், “அதெல்லாம் அப்படித்தான் ..” , என்று சிரிப்பாள்.
அவள் அவனது சிறு வயது தோழி. தோழமையும் தாண்டி அவளோடான பிணைப்பு மிகப் பெரியது .அவனை மனம் வருந்த வைக்கும் யாரானாலும் அவளைப் பொறுத்த வரை மன்னிப்புக்குத் தகுதியற்ற குற்றவாளிகள் .
இருவரின் துறைகள் வேறு ..வாழ்கை முறை வேறு ..ஆனாலும் அவளது எல்லாமும் அவன் தான் . ஆகாயத்தின் அடியில் இருக்கும் எதைப் பற்றியும் பேசி , விவாதிக்க அவன் வேண்டும் அவளுக்கு.
ஒருநாள் அலுவலகத்தில் இருந்து கோபமாக வந்தவள் , அவனை பார்த்து முறைத்துக் கொண்டே இருந்தாள் .
“ஏன்டா மா இவ்வளவு கோபம்”, என்றவனிடம் “ஒண்ணுமில்ல போ ” என்று முகம் திருப்பினாள் .
“சரி சொல்லு ..என்ன பிரச்சனை”, என்று துருவியவனிடம் ,”அந்த மகேஷ் இல்ல..அவன் லவ் லெட்டர் கொடுத்தான் இன்னிக்கு ..கிழிச்சு அவன் முகத்துலயே எறிஞ்சிட்டேன் .. அவனுக்கு என்னை பார்த்தா எப்படி தெரியுது ” என்று கொதித்தாள் .
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் , “ஐ லவ் யு குட்டிம்மா ..நாம கல்யாணம் பண்ணிக்கலாமா ” என்று கேட்டான் . ஒரு நிமிடம் விழியகல அவனைப் பார்த்தவள் பொது இடம் என்றும் பார்க்காமல் அவன் தோளில் சாய்ந்து விசித்தாள்.
“இதை கேட்க இப்போதான் மனசு வந்துச்சா ?” , என்று சிரிப்பும் அழுகையுமாய் ஊடல் கொண்டாள் .

“நான் என் ஆசைய சொன்னா அது உன்னைய காயப்படுத்திருமோ-னு பயந்து தான் இவ்வளோ நாள் தள்ளி போட்டேன் ..இன்னிக்கு என்னவோ ஒரு வேகத்துல சொல்லிட்டேன் . எதுவானாலும் உன்னோட நட்பு எனக்கு ரொம்ப முக்கியம் .அத இழக்க நான் தயாரா இல்ல ” என்றவனிடம் , ” உன்னை விட்டு நான் மட்டும் எப்படி இருப்பேனாம்? ” என்று சிரித்தாள் .
திருமண இரவில் படபடப்பை உணர்ந்து பயந்து விழித்தவளிடம்,”என்கிட்டே உனக்கென்ன பயம் ?” என்று மென்மையாய்க் கேட்டான்.
“சொல்லத் தெரியல..ஆனா பயமா இருக்கு “, என்று அரற்றியபடி அவன் மார்பில் புதைந்து ஒளிந்து கொண்டவளை ஆதரவாய் அவன் அணைத்துக் கொண்டதில் துளி கூட காமத்தின் கலப்பு இல்லை .
வாழ்க்கையின் பாதை அவர்களுக்கு மனுபரதன் , மஞ்சரி என இரு மலர்களைப் பரிசளித்தது .
மனுபரதன் பிறந்த போது பிரசவ சோர்வு நீங்கி கண் விழித்தவுடன் , குழந்தையை மறந்து “அவன் எங்கே” என்று தேடிய பாசக்காரி அவள்.
தலைப் பிரசவத்தின் வலியைக் கூட அவனது அருகாமை தந்த பலத்தில் தாங்கியவள், அவனுக்குச் சிறு தலைவலி என்றாலும் பதறிப்போவாள்.
வேலை ,வீட்டு நிர்வாகம், பிள்ளைகள் படிப்பு என பம்பரமாய்ச் சுழல்பவள் , அவர்களுக்கு மட்டுமேயான நேரத்தை மட்டும் தவற விடவே மாட்டாள். அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு சட்டை பட்டனை திருகியபடி கதை பேசுவாள் .சில நேரங்களில் அவனை மடி சாய்த்துக் கொண்டு அவனது தலைக்குள் விரல்களை நுழைத்து அளைந்து விளையாடியபடி கதை பேசுவாள். வேலை முடிந்து இரவு எந்த நேரம் வந்தாலும் சோர்வின் சாயலே இன்றி புன்னகை முகத்துடன் உணவிடுவாள் .
காலம் பறந்தது . மகன் மருத்துவக்கல்லூரியில் விரிவுரையாளர் ஆனான். மஞ்சரி மகப்பேறு மருத்துவரானாள் .
மனுபரதனுக்கு திருமண வயது ஆனதும், ” உனக்கு எப்படிப்பட்ட பொண்ணு பாக்கணும்” என்று அவனிடம் கேட்ட போது , ” அம்மா மாதிரி பாருங்கப்பா” என்றான் .
“அப்படின்னா அண்ணா,இந்த ஜென்மத்துல உனக்கு பொண்ணு கிடைக்கிறது கஷ்டம் தான். ஏன்னா அப்பாவை பொறுத்தவரைக்கும் அம்மா மாதிரி பொண்ணு இந்த உலகத்துலயே கிடையாது. அப்படித்தானே பா ” என்று மஞ்சரி சிரித்த போது , வெட்கத்தில் சிவந்த அவளது முகம் இன்னும் அவன் நெஞ்சில் ஆடுகிறது.
மனுபரதன் விரும்பியபடி அவளது பிரதி பிம்பமாய் வாசவி கிடைத்தாள். வாழ்கை தெளிந்த நீரோடையைப் போல் சென்ற போது தான் அந்த இருண்ட நாளும் வந்தது.
இரவில் அவனோடு கதை பேசி சிரித்து, அவனது நெஞ்சில் சாய்ந்து உறங்கியவள், விழித்தெழ மறந்து விட்டாள். பிள்ளைகள் கதறினார்கள். அவனது விழிகளில் ஒரு துளி நீரும் கசியவில்லை . கண் மூடி துயில்பவளை போல் இருந்தவளுடன் மனதோடு பேசிக் கொண்டிருந்தான்.
“நேரமாச்சு ..எழுந்துக்கோ குட்டிம்மா..நீதானே தினமும் என்னய எழுப்பி விடுவ..இன்னிக்கு நான் என்ன சட்டை போட்டுக்கணும் னு நீ தானே சொல்லுவ .. இப்படி தூங்கிட்டே இருந்தா என்ன அர்த்தம் ..எழுந்துக்க குட்டிம்மா…” அவள் பதில் சொல்லவில்லை .அவனும் அழவில்லை …
அவளது காரியங்கள் முடிந்து விளக்கின் சுடர் ஒளியில் புன்னகைத்துக் கொண்டிருந்தவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.
“உன் மடியில் படுத்துக்கணும் போல இருக்கு குட்டிம்மா ” மனதோடு பேசியவனது காதுகளில் ” படுத்துகோ மா” என்ற அவளது குரல் தெளிவாய்க் கேட்டது .
அன்றிலிருந்து இன்றுவரை அவள் குரல் அவனது காதுகளில் மட்டும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர்களை அறிந்தவர்கள் அனைவருக்கும் அவளது பிரிவைத் தாங்கி அவன் வாழ்வது அதிசயமாகவே இருந்தது. அவள் பிரியவே இல்லை என்று இவர்களுக்கு யார் சொல்வது??
அப்பா எங்க கூட வந்திருங்கப்பா” மகனும் மகளும் மாறி மாறி அழைத்தும், ” உங்க அம்மா கூடவே இருக்கேன் பா ..” என்று மறுத்து விட்டான் .இது அவர்களது கூடு . அவளது சுவாசம் நிறைந்த கூடு . அதை விட்டு எப்படிப் பிரிவது ?

“அப்பா ..வாசவிக்கு இன்னிக்கு காலை 6 மணிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு .. நேரா ஹாஸ்பிடல் வந்திருங்கப்பா “, மகனது தொலைபேசி அழைப்பில் மருத்துவமனைக்குக் காரைத் திருப்பினான் . மஞ்சரி தான் பிரசவம் பார்த்திருந்தாள் .
அவனைக் கண்டதும் ஓடி வந்தவள் ,” அப்பா ..ஒரு அதிசயம்..வந்து பாருங்களேன்..” என்று பரவசக் குரலில் அழைத்தாள் .உள்ளே நுழைந்ததும் அதிசயம் புரிந்தது .அவளைப் போலவே உதட்டின் கீழ் ஓரம் , சிறிய மச்சத்துடன் இருந்த குழந்தையை அள்ளி எடுத்தான் . அவள் கழுத்தில் கடைசி வரை அணிந்திருந்த , அவர்களது புகைப்படத்துடன் கூடிய லாக்கெட்டை , அவளுக்குப் பின் அவன் அணிந்திருந்தான் . அவர்களது திருமணத்தின் பின் அவளுக்கு அவன் அளித்த முதல் பரிசு அது .
குழந்தையை குனிந்து எடுத்த வேகத்தில், சட்டையை விட்டு வெளியே வந்த டாலரைப் பற்றிய குழந்தை , அவனைப் பார்த்து “ம் மா..” என்றது…
குழந்தையின் பிஞ்சு விரல்களைக் கன்னத்தில் பதித்தவன் ஆற்றவோ தேற்றவோ ஆள் இன்றி அழ ஆரம்பித்தான் …!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…