டெல்லி புதிய கலால் கொள்கையால் அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு; தணிக்கை துறை அறிக்கை தாக்கல்

புதுடெல்லி,

டெல்லி சட்டசபைக்கான தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு கூடுதலாக 48 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியமைத்தது. ஷாலிமர் பாக் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற, அக்கட்சியை சேர்ந்த ரேகா குப்தா (வயது 50) முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார்.

ஆம் ஆத்மியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியான அதிஷி டெல்லி சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரானார். முதல்-மந்திரியாக ரேகா குப்தா பொறுப்பேற்றதும், சட்டசபையில் மத்திய தணிக்கை துறை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று, டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் தொண்டர்கள் முன்பு, கடந்த 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, டெல்லி சட்டசபையில் நடைபெறவுள்ள முதல் கூட்டத்தொடரில், தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்படும். எவரெல்லாம் கொள்ளையடித்தனரோ, அவர்கள் அதனை திருப்பியளிக்க வேண்டும் என பேசினார். ஆம் ஆத்மி அரசில் ஊழல் நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இதனை அவர் பேசினார்.

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் நடைபெற்ற முறைகேடுகளால், ரூ.2,026 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது என இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையின் அறிக்கை இதற்கு முன்பு தெரிவித்து இருந்தது.

கொள்கை விசயங்களில் இருந்து விலகி செல்லுதல், விற்பனை விலையில் வெளிப்படை தன்மை இல்லாத நிலை மற்றும் உரிமங்களை வழங்கியதில் விதிமீறல்கள் போன்றவை உள்ளன என தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தன. இதனால், அரசு கஜானாவுக்கு ரூ.2,026 கோடி இழப்பு ஏற்பட்டது என அப்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், டெல்லியில் முதல்-மந்திரியாக ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ.க. அரசு, டெல்லி மதுபான கொள்கை பற்றிய மத்திய தணிக்கை துறை அறிக்கை ஒன்றை சட்டசபையில் இன்று தாக்கல் செய்து உள்ளது.

ஆம் ஆத்மி ஆட்சி செய்த, 2017 முதல் 2021 வரையிலான 4 ஆண்டுகளை உள்ளடக்கிய அந்த அறிக்கையில், டெல்லியில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானம் மற்றும் வெளிநாட்டு மதுபானம் ஆகியவற்றின் விநியோகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கையின்படி, தேசிய தலைநகர் டெல்லியில் மதுபான விநியோகம் பற்றி கலால் துறை மேற்கொண்ட கண்காணிப்பு மற்றும் சீரமைப்பு பணியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது என அந்த தணிக்கை அறிக்கை தெரிவிக்கின்றது.

இதனால், 2021-2022 கலால் கொள்கையின்படி, அரசுக்கு மொத்தத்தில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு கூடுதலாக நிதியிழப்பு ஏற்பட்டு உள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது. பல்வேறு வகையான உரிமங்களை வழங்குவதற்கு ஏதுவான கலால் விதிகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான பல்வேறு விசயங்களில் முறையான சோதனை செய்யப்படாமல் உரிமங்களை அந்த துறையானது வழங்கியுள்ளது என தணிக்கை அறிக்கை தெரிவிக்கின்றது.

டெல்லியில் இதற்கு முன்பு ஆட்சி செய்த ஆம் ஆத்மி அரசின் செயல்பாடுகள் பற்றிய மத்திய தணிக்கை துறையின் நிலுவையிலுள்ள 14 அறிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.

இதேபோன்று பல்வேறு மதுபான வகைகளுக்கான தண்ணீரின் தரம், தீங்கு இழைக்கும் உபபொருட்கள், கன உலோகங்கள், மெத்தில் ஆல்கஹால், நுண்ணுயிரி பரிசோதனை அறிக்கைகள் உள்பட முக்கிய பரிசோதனை அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.