பெங்களூரு,
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு – உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 180 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் அணியும் 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக ஆட்டம் ‘டை’ ஆனது.
இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி 8 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 9 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறையில் பெங்களூருவை வீழ்த்தி உ.பி.வாரியர்ஸ் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் பெங்களூரு கேப்டன் ஸ்மிருதி மந்தனா அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இப்போட்டியில் நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நிறைய விஷயங்களைச் சரியாகச் செய்தோம். நாங்கள் இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு வலுவாக மீண்டு வருவோம். இந்தப் போட்டியில் நான் சோபிக்க தவறினேன்.
அதனால் சில விஷயங்களில் உழைத்து வலுவாக மீண்டு வருவேன். எல்லிஸ் பெர்ரி போன்ற ஒரு ஆல் ரவுண்டர் எங்கள் அணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், அவரின் பந்துவீச்சு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அனைத்து பந்து வீச்சாளர்களும் மிகச் சிறப்பாக பந்து வீசினர். கிரிக்கெட்டில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கும். அதனால் இதிலிருந்து நாங்கள் முன்னேறுவோம் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.