திருவனந்தபுரம்: ‘பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் ரூ.18 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாஜகவிடம் அவரது சமூக வலைதளப் பக்கம் ஒப்படைக்கப்பட்டது’ என கேரளா காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு நடிகை ப்ரீத்தி ஜிந்தா எதிர்வினையாற்றியதன் தொடர்ச்சியாக, இரு தரப்புக்கும் இடையில் வார்த்தைப் போர் மூண்டுள்ளது.
கேரளா மாநில காங்கிரஸ் தமது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவு ஒன்றில், ‘கடந்த வாரம் வங்கி ஒன்று திவலான நிலையில், பாலிவுட் நடிகை தனது சமூக வலைதளப் பக்கத்தை பாஜக வசம் ஒப்படைத்துவிட்டு ரூ.18 கோடி கடன் தள்ளுபடி பெற்றுவிட்டார். வங்கியில் பணம் போட்டவர்கள் தங்களின் பணத்துக்காக வீதிகளில் இறங்கிப் போராடுகின்றனர்’ என்று தெரிவித்து நடிகை ப்ரீத்தி ஜிந்தா குறித்த செய்தியைப் பகிர்ந்திருந்தது.
கேரள காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டுக்கு உடனடியாக ப்ரீத்தி ஜிந்தா பதிலளித்திருந்தார். அதில், “என்னுடைய சமூக வலைதளப் பக்கத்தை நான்தான் கையாளுகிறேன். நீங்கள் இவ்வாறு போலிச் செய்திகளைப் பரப்புவது குறித்து நான் வெட்கப்படுகிறேன். யாரும் எனக்காக எந்தக் கடனையும் தள்ளுபடி செய்யவில்லை, வேறு எதுவும் செய்யவில்லை.
ஓர் அரசியல் கட்சி அல்லது அவர்களின் பிரதிநிதிகள் இவ்வாறு போலிச் செய்திகள், மூன்றாம் தர கிசுகிசுக்களை பரப்புவது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. நீங்கள் குறிப்பிடும் அந்தக் கடன் 10 வருடங்களுக்கு முன்பே முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டது என்பதை தகவலுக்காகச் சொல்கிறேன். இந்த விளக்கம் எதிர்காலத்தில் தவறான செய்திகள் பரவுவதை தடுக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
ப்ரீத்தி ஜிந்தாவின் இந்த பதிலடிக்கு கேரள காங்கிரஸ் கட்சி நீண்ட விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளது. அதில், ‘ஐடி பிரிவிடம் தங்களின் சமூக வலைதளப் பக்கத்தை ஒப்படைத்திருக்கும் மற்ற பிரபலங்களைப் போல இல்லாமல், உங்கள் சமூக ஊடகக் கணக்குகளை நீங்களே கையாளுவதில் மகிழ்ச்சி. உங்கள் கடன் தள்ளுபடி குறித்து விளக்கம் அளித்தமைக்கு நன்றி. அது குறித்து நாங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால், அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம்.
ஊடகத்தில் வந்த செய்தியின் அடிப்படையில் நாங்கள் தகவலைப் பகிர்ந்திருந்தோம். அந்தச் செய்தியின்படி, நியூ இந்தியா கூட்டுறவு வங்கியின் முன்னாள் ஊழியர் ஒருவர், அங்கு நடக்கும் ஊழல்கள் குறித்து எச்சரித்து ஆர்பிஐக்கு 2020-ல் கடிதம் எழுதியிருந்தார். அதில் உங்கள் பெயரும், சில பிரபலங்களின் பெயர்களும் இருந்தன. நாங்கள் வங்கியில் பணத்தை போட்டு ஏமாந்த வாடிக்கையாளர்களின் பக்கம் நிற்கிறோம். அந்தச் செய்தி தவறு எனில், உங்களிடம் இருக்கும் ஆதாரங்களைப் பொது வெளியில் பகிர்ந்து ஏமாந்தவர்களின் நலனுக்காகவும் உங்களின் குரலை உயர்த்துமாறு கேட்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளது.
கேரள காங்கிரஸின் இந்தப் பதிவுக்கும் நடிகை ப்ரீத்தி ஜிந்தா பதிலடி கொடுத்துள்ளார். அது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எவ்வளவு தவறான தகவல்கள் வலம் வருகின்றன. ஆனால் கடவுளுக்கும், சமூக ஊடகத்துக்கும், எக்ஸ் தளத்துக்கும் நன்றி! எனது வாழ்க்கைப் பயணத்தில் பல மதிக்கத்தக்க பத்திரிகையாளர்கள் தவறான செய்திகள் வெளியிட்டதையும், உண்மை தெரிந்து அதனைத் திருத்தி மன்னிப்பு கோராதவர்களையும் பார்த்திருக்கிறேன். அவர்களைப் பொறுப்பேற்க வைக்க வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன். எதிர்காலத்தில் சில விஷயங்கள் மாறும். அடுத்து என்னைப் பற்றிய செய்திகள் எழுதினால், அதில் சொல்லப்படும் செய்திகள் சரியா என என்னிடம் கேட்டுக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக கருத்துப் பற்றிய ப்ரீத்தியின் விமர்சனம்: பிரபலமானவர்கள் குறித்து சமூக ஊடகங்களில் வரும் கருத்துகள் குறித்து முன்பு கடுமையாக விமர்சித்திருந்தார் ப்ரீத்தி ஜிந்தா. அதில், “உங்கள் பிரதமரை நீங்கள் பாராட்டினால் நீங்கள் ஒரு பக்தர். நீங்கள் பெருமைமிகு இந்துவாகவோ இந்தியனாகவோ இருந்தால் நீங்கள் ஆனந்தமான பக்தர். சரி அது உண்மையாகவே இருக்கட்டும். நாங்கள் யாராக இருக்க விரும்புகிறோமோ, மக்கள் எங்களை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை” என்று சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.