சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அறிவித்துள்ளார்.
சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில பொறுப்பு முதல் ஒன்றியம் வரை பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கடந்த மாதம் 3 ஆயிரம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து மாநில கொள்கை பரப்புச் செயலாளராகப் பணியாற்றி வந்த கோ.தமிழரசன் கடந்த 19-ம் தேதி வெளியேறினார்.
இதற்கிடையே, நாதக மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான காளியம்மாள் கட்சியில் இருந்து விலகுவதாக தகவல் பரவியது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் மார்ச் 2-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் காளியம்மாள் பங்கேற்கும் நிலையில், அழைப்பிதழில் அவரது பெயர் சமூக செயற்பாட்டாளர் என்ற முறையில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், நாதக.வில் இருந்து விலகுவதாக காளியம்மாள் நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாம் தமிழர் கட்சியில் பயணித்த ஒவ்வொரு கணமும், உண்மையும், நேர்மையுமாய் இருந்திருக்கிறேன். உளப்பூர்வமாக என் குடும்பத்துக்கும் மேலாக கட்சியை நேசித்திருக்கிறேன். இந்த 6 ஆண்டுகால பயணம் எனக்கு அரசியல்ரீதியான பல அனுபவங்களை கொடுத்துள்ளது. சமூக மாற்றத்துக்காக, ஒரு பெண்ணாக எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி இந்த களத்தில் நின்றிருக்கிறேன்.
எனக்கான நெருக்கடிகள் நிறைய வந்தபோதும் என்மீது ஆதரவாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையாலும், நான் அவர்கள் மீது கொண்ட அன்பாலும் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருந்தேன். ஆனால் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதை எண்ணி மனம் வருந்துகிறேன்.
அந்தவகையில் காலத்தின் சூழல், உயிராக எண்ணி வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன், கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவதூறு வெறும் வார்த்தைகள்தானே என்று நினைத்து அள்ளி தெளிப்பவர்களுக்கு மத்தியில், என்னுடன் இத்தனை நாட்களாக உண்மையாய், உறவாய், பழகிய, பயணித்த அத்தனை உறவுகளுக்கும் என் நன்றி. தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வழியில் என் பயணம் தொடரும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
நாதகவில் இருந்து வெளியேறி இருக்கும் காளியம்மாள், அடுத்தகட்டமாக தனது அரசியல் பயணத்தை தவெக அல்லது திமுகவுடன் இணைந்து முன்னெடுத்து செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளும் முடிந்திருப்பதாக கூறப்படும் நிலையில், தவெகவில் அவர் சேரும்பட்சத்தில் அவருக்கு பெரிய பொறுப்பு அளிக்கப்படலாம் எனவும், திமுகவில் சேர்ந்தால் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.