மதுரை: பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும் நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக்கள் முறையாகச் செயல்படுகின்றனவா என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய வழக்கறிஞர் சங்க உறுப்பினர் சப்னா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு, ஆண்டுதோறும் மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 2021-22-ல் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு பின்னர் மறுகட்டமைப்புச் செய்யப்படவில்லை. இதனால், மாணவர்களை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதற்கான உரிய திட்டம் வகுக்கப்படாமல் உள்ளது.
பள்ளி மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை பள்ளிகள் வாயிலாக, மாநிலக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். இது தொடர்பாக அரசு வழிகாட்டுதல்களைப் பிறப்பித்திருந்தாலும், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக் குழு முறையாகச் செயல்படுவதில்லை.
எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்கவும், அரசுப் பள்ளிகளில் செயல்படும் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை மறுகட்டமைப்பு செய்யவும், அனைத்து ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வுப் பயிற்சி அளிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கு.சாமிதுரை வாதிடும்போது, “பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன. இது தொடர்பாக கேரள அரசு அமைத்துள்ள பாடத் திட்டத்தை அம்மாநில உயர் நீதிமன்றம் பாராட்டியுள்ளது. பாலியல் குற்றங்களில் குறித்து ஆசிரியர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு தொடர்பான அரசாணையை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், “தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு அறிவுரைக் குழு அமைக்கப்பட்டுள்ளதா? அந்தக் குழுக்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித் துறைச் செயலர், இயக்குநர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.