“பொறுத்தது போதுமடா, பொங்கி எழ வந்துள்ளேன்!” – செல்லூர் ராஜூ பேச்சால் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு

மதுரை: “பொறுத்தது போதுமடா, பொங்கி எழுவதற்கு வந்துள்ளேன்,” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை மாநகராட்சி கூட்டத்தில் கூறிய பின் திமுக கவுன்சிலர்கள் கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், “நான் இன்று இந்த கூட்டத்துக்கு வந்தது, ஊர் சேர்ந்து நானும் தேர் இழுக்க வந்துள்ளேன். அரசியல் பேச வரவில்லை. சமீப நாட்களாக மாநகராட்சியை பற்றி வருகிற செய்திகளை பார்த்து பொறுத்தது போதுமடா பொங்கி எழு என்ற மனோகரா படம் வசனம் அடிப்படையில் வந்துள்ளேன். நான் பார்த்த அனுபவங்கள், கேள்விப்பட்டவற்றை சொல்கிறேன். கொஞ்சம் நேரம் பேசலாமா?” என்றார்.

அதற்கு மேயர் இந்திராணி, “தாராளமாக பேசலாம், உங்கள் கருத்து மட்டுமில்லை, அனைத்து கவுன்சிலர்கள் கருத்துகளையும் உள்வாங்கி அதை நிறைவேற்றுவதற்குதான் மாநகராட்சி உள்ளது,” என்றார். தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, “உயர் நீதிமன்றமே வருத்தப்படும் அளவுக்கு கோயில் மாநகரமான மதுரை, குப்பை நகரமாக மாறியுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளது,” என்றார். அதற்கு திமுக கவுன்சிலர்கள், உயர் நீதிமன்றம் கூறிய இடம், மாநகராட்சிக்குட்பட்டது இல்லை என்று கூச்சலிட்டனர்.

அதற்கு செல்லூர் கே.ராஜூ, “முதலில் என்னைப் பேச விடுங்கள்” என்றார். அதற்கு மேயர் இந்திராணி, “தவறாக பேசக்கூடாது அல்லவா,” என்றார். அதிமுக கவுன்சிலர்கள் எழுந்து, முன்னாள் அமைச்சர் பேசும்போது குறுக்கீடாதீர்கள் என்று பதில் கோஷமிட்டனர். தொடர்ந்து பேசிய செல்லூர் கே.ராஜூ, “எதற்கு சொல்கிறேன் என்றால், மதுரை சாலைகளில் என்னாலேயே செல்ல முடியவில்லை. இடுப்பு எலும்பு முடிந்துவிடும் போல் உள்ளது. சாலைகளில் குப்பைகள் குவிந்து தொற்று நோய் பரவுகிறது. நானே மாநகராட்சி அதிகாரிகளிடம் குறிப்பிட்ட இடங்களை சொல்லி சுட்டிக்காட்டினேன். ஒரு மாதத்திற்கு மேலாகியும் அகற்றப்படாமல் உள்ளது. அதைதான் இன்று உயர் நீதிமன்றமும் கூறியுள்ளது.

மேயரும், ஆணையாளரும் பெண்கள். கவுன்சிலர்களிலும் 50 சதவீதம் பெண்கள். அவையில் பெண்கள் நிறைந்து இருப்பது, பெருமையாக உள்ளது. மதுரையில் மீனாட்சி கூட 6 மாதம்தான் ஆட்சி செய்வார். ஆனால், மேயர் நீங்கள் 5 ஆண்டுகள் ஆட்சி செய்கிறீர்கள். மதுரையை மேம்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் உங்களிடம் உள்ளது. மதுரையில் 24 மணி நேரம் குடிநீர் வழங்கக்கூடிய பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் எப்போதுதான் நிறைவேறும். எப்போது பார்த்தும், இப்போது வரும், அப்போது வரும் என்கிறார்கள். ஆனால், வந்தபாடுதான் இல்லை. 5,6 ஆணையாளர்கள் மாறிவிட்டார்கள்.

ஆணையாளரும், மேயரும் பெண்களாக உள்ளீர்கள். பெண்களுடைய இந்த குடிநீர் பிரச்சனையை தீர்க்க முயற்சி எடுக்க வேண்டும். 3 மாதத்திற்கு ஒரு முறை வார்டு பொறியாளர் அதிகாரிகளை மாற்றுகிறீர்கள். அவர்களுக்கு எப்படி வார்டின் பிரச்சனைகள் பற்றி தெரியும். சுகாதாரப் பணிகளை பெரியண்ணன் அடிப்படையில் ஒருவர் எடுத்துக் கொண்டு, தூய்மைப் பணியாளர்களை பாடாய் படுத்துகிறார்கள். வரி விதியில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக அமைச்சர் நேருவே சொல்லியுள்ளார். பெரிய பெரிய நிறுவனங்களிடம் வாங்க வேண்டிய வரியை இன்னும் வாங்காமல் உள்ளனர்.

வரியை வசூலிக்க மேயர் நீங்கள்தான் சாட்டையை சுழற்ற வேண்டும். மீனாட்சியம்மன் கோயில் அருகே சுற்றியுள்ள கட்டிடங்கள் உயரம், கோபுரத்தை காட்டிலும் குறைவாக இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த விதியை பின்பற்றாத கட்டிடங்களை இடிக்கலாம். ஏன் மாநகராட்சி இந்த விஷயத்தில் தயக்கம் காட்டுகிறது. மதுரையில் உள்ள அனைத்து திட்டங்களும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதுதான். அதுபோல், மதுரையில் இந்தந்த திட்டங்கள் உங்கள் ஆட்சியில் செய்தது என்று எதிர்காலத்தில் பெருமைப்படனும். நிர்வாகம் ரொம்ப மெதுவாக செல்கிறது,” என்றார்.

அதற்கு மேயர் இந்திராணி, “உங்கள் தொகுதிக்குட்பட்ட ஒரு வார்டில் நானும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் சமுதாயக் கூடத்தை திறந்து வைத்துவிட்டு வெளியெ வந்தபோது, உங்கள் பகுதி செயலாளர் ஒருவர் எங்களிடம் வந்து நாங்கள் 10 ஆண்டு செய்யாதததை நீங்கள் செய்துள்ளீர்கள், இதுபோல் நிறைய செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று பாராட்டினார். அப்படி உங்கள் கட்சியினரும் பாராட்டும்படிதான் எங்கள் ஆட்சி நடக்கிறது. அந்த வீடியோவை தங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன்.

அதுபோல், ஒவ்வொரு முறையும் மேற்கு தொகுதிக்குள் நாங்கள் செல்லும்போதும், 10 ஆண்டு ரோடே போடல, உங்கள் ஆட்சியில்தான் ரோடு போட்டுள்ளீர்கள்,” என்கின்றனர். நான் அரசியல் செய்ய வரவில்லை. அப்படி நீங்கள் சொன்னமாதிரி நான் மக்களுக்கு நல்லது செய்யாமல் இருந்திருந்தால், எப்படி மக்கள் 3 முறை அந்த தொகுதியில தேர்ந்தெடுத்து இருப்பார்கள்” என்று கூறியபடியே அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது திமுக – அதிமுக கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதமும், கூச்சலும் ஏற்பட்டது.

‘தெர்மகோல்’ திட்டத்துககு செல்லூர் ராஜூ புது விளக்கம் : செல்லூர் கே.ராஜூ கூறுகையில், “தற்போது கோடைகாலம் வருகிறது, குடிநீர் பற்றாக்குறை போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற ஒரு கோடைகாலத்தில் வைகை அணையில் 18 அடிதான் தண்ணீர் இருந்தது. அப்போதைய பொதுப்பணித் துறை பொறியாளர்கள், மாவட்ட ஆட்சியர் சொல்லிதான், வறட்சியை சமாளிக்க வைகை அணையில் தண்ணீர் ஆவியாகுவதை தடுக்க தெர்மகோல் போடும் யோசனையை சொல்லினர். உலகத்தில் பல இடங்களில் இந்தத் திட்டம் இருப்பதாகவும் கூறினர். அதன்படிதான் அந்தத் திட்டத்தை நிறைவேற்றினோம். ஒரு அதி்காரி இப்படி சொன்னால் நீங்கள் செய்வீர்களா, மாட்டீர்களா? அதைதான் நானும் செய்தேன். கடைசியில் அதிகாரிகளை விட்டுவிட்டு, என்னை மட்டும் தெர்மகோல், தெர்மகோல் என்று ஓட்டுகிறார்கள்,” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.