புதுடெல்லி: கேரளாவில் இடது சாரி தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசின் கொள்கைகளை காங்கிரஸ் எம்.பி. பாராட்டி பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது அவர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் எடுத்த புகைப்படம் சசி தரூர் பாஜகவில் இணைய உள்ளரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் நேற்று காலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பிரிட்டன் வர்த்தக அமைச்சர் ஜோனாதன் ரொனால்ட்ஸ் உடன் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரும் இடம்பெற்றுள்ளார். இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
எதிர்க்கட்சிகளை புகழ்ந்து காங்கிரஸுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வரும் சசி தரூர் மத்திய அமைச்சருடன் நெருக்கமாக இருக்கும் படத்தை பதிவிட்டுள்ளது அவர் அந்த கட்சியில் இணையலாம் என்பதை சுட்டிக்காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸுக்கு நான் தேவையில்லை என்றால் எனக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக சசி தரூர் ஏற்கெனவே கூறியுள்ளதை அந்த வட்டாரங்கள் இதற்கு ஆதாரமாக கூறுகி்ன்றன.