கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகருக்கு வடக்கே ஆஹிரிதோலா என்ற இடத்தில் ஹூக்ளி ஆற்று பகுதிக்கு 2 பெண்கள் டாக்சி ஒன்றில் வந்து இறங்கினர். அவர்களின் கையில் நீல நிற சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. அவர்கள் அதனை ஆற்றுக்குள் தூக்கி வீச முயன்றனர்.
அப்போது, அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி, சூட்கேசில் என்ன உள்ளது? என கேட்டுள்ளனர். அதற்கு, அவர்கள் வளர்த்து வந்த நாயின் இறந்த உடல் இருக்கிறது என தெரிவித்தனர். ஆனால், சூட்கேசை திறந்து காட்ட கூறியபோது, அவர்கள் தயங்கியபடி நின்றுள்ளனர். இதில், சூட்கேசை திறந்து பார்த்தபோது, சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே மனித உடலின் பாகங்கள் இருந்துள்ளன. அவற்றை ஆற்றில் வீசி செல்வதற்காக வந்துள்ளனர். இதனை தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து 2 பெண்களை விசாரித்தனர். அவர்களிடம் உள்ளூர் பயணிகள் ரெயில் டிக்கெட் ஒன்றும் இருந்துள்ளது.
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த நபர் யாரென்றும், உடல் பாகங்கள் அவர்களிடம் எப்படி வந்தன? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. போலீசார் சம்பவ பகுதிக்கு சென்றதும், பாதுகாப்பை அதிகரிக்கும்படி கோரி, அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.